பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான டோக்கன் வினியோகம் இன்று முதல் ரேஷன் கடைகளில் தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு பரிசு தொகுப்பு வழங்கப்படும்., பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
இந்தாண்டிற்கான பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பொங்கல் பரிசு: 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்ய அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்காகத் தமிழ்நாடு அரசுக்கு ரூ. 238.92 செலவினம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு மட்டுமன்றி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. முதலில் இந்த பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு மட்டும் வெளியான நிலையில், ரொக்கம் குறித்து எந்தவொரு அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து பலரும் பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.