பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 12ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மொத்தம் 13,183 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
பொங்கல் திருநாள் அடுத்த வாரம் கொண்டாடப்படும் நிலையில், சென்னை, கோவை உட்பட வெளியூர்களில் பணியாற்றுவோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், 12ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார். அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,706 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 8,478 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
மேலும், டிசம்பர் 12ஆம் தேதிக்கு முன்பு திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள்,
கோயம்பேடுக்கு பதில் கிளாம்பாக்கத்தில் இருந்து உரிய நேரத்தில் பயணம் செய்யலாம். 12 முதல் 14 ஆம் தேதி வரை அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வதற்கு முன்பதிவு செய்ய ஏதுவாக கோயம்பேடு, கிளாம்பாக்கம், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையங்களில் மொத்தம் 11 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், TNSTC அதிகாரப்பூர்வ செயலி மற்றும் www.tnstc.in என்ற இணைதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். மேலும், பேருந்துகள் இயக்கம் குறித்த தகவலை பெறவும், புகார் அளிக்கவும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 9445014450 மற்றும் 9445014436 என்ற தொலைபேசி எண் வழங்கப்பட்டதுள்ளது. அத்துடன், தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார் அளிக்க 18004256151 என்ற இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர 16ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,830 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களுக்கு 6,459 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
Content Credits: https://tamil.news18.com/tamil-nadu/pongal-special-buses-minister-sivashankar-announcement-1301603.html