இந்திய விலங்குகள் நல வாரியத்தின் விலங்கு நண்பன் மற்றும் ஜீவ கருணை விருது வழங்கும் விழா நாளை (2025 பிப்ரவரி 27 ) புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், திரு ஜார்ஜ் குரியன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா, கால்நடை பராமரிப்பு ஆணையர் மற்றும் இந்திய விலங்குகள் நலவாரியத் தலைவர் டாக்டர் அபிஜித் மித்ரா, மாநில விலங்குகள் நல வாரிய பிரதிநிதிகள், விலங்குகள் வதை தடுப்பு மாவட்ட சங்கங்கள், பசு சேவை ஆணையங்கள், விலங்கு ஆர்வலர்கள், விலங்குகள் நல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
விலங்கு நண்பன் விருது மற்றும் ஜீவ கருணை விருது என இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படும். விலங்கு நண்பன் விருது ஐந்து துணை பிரிவுகளின் கீழ் வழங்கப்படும். அதாவது தனிநபர், புதுமையான சிந்தனை (தனிநபர்), வாழ்நாள் விலங்கு சேவை (தனிநபர்), விலங்குகள் நல அமைப்புகள் மற்றும் பெருநிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அமைப்புகள் அல்லது கூட்டுறவு நிறுவனங்களுக்கு தலா இரண்டு விருதுகள் வழங்கப்படும். ஜீவ கருணை விருது மூன்று துணை பிரிவுகளில் வழங்கப்படும்: தனிநபர், விலங்குகள் நல அமைப்பு மற்றும் பள்ளிகள், நிறுவனங்கள், ஆசிரியர்கள் அல்லது குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
இந்த முயற்சி விலங்கு நலன் மற்றும் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக சிறந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கொண்டாட்டத்தின் முதன்மை நோக்கம் சமூகத்தில் விலங்குகள் மீதான கருணை மற்றும் இரக்கத்தை கௌரவிப்பதும் ஊக்குவிப்பதும் ஆகும், அதே நேரத்தில் விலங்குகளை மனிதாபிமான முறையில் நடத்த குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.