இந்திய தேசிய இணைய பரிமாற்ற நிறுவனமான நிக்ஸி(NIXI) இணைய ஆளுகை உள்ளகத் தொழிற்பயிற்சி, திறன் வளர்ப்பு திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் இந்திய மக்களிடையே இணைய நிர்வாகத்தில் (ஐஜி) விழிப்புணர்வை உருவாக்குவதையும் நிபுணத்துவத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளரும், நிக்ஸி தலைவருமான திரு எஸ். கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பல்வேறு நிறுவனங்களுடன் உலகளாவிய இணைய ஆளுகை செயல்முறைகளில் திறம்பட ஈடுபடுவதற்கான அறிவை பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த உள்ளகப் பயிற்சி எனப்படும் இன்டர்ன்ஷிப் திட்டம் இரண்டு வகையாக உள்ளது. ஆறு மாத திட்டம், மூன்று மாத திட்டம் ஆகியவை அவை. பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000/-உதவித்தொகை வழங்கப்படும்.
இது பற்றிய கூடுதல் தகவலுக்கு, https://nixi.in/scheme என்ற இணையதள இணைப்பைப் பார்க்கலாம்.
2003 ஜூன் 19 அன்று நிறுவப்பட்ட இந்திய தேசிய இணைய பரிமாற்ற அமைப்பு (NIXI) என்பது இந்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு லாப நோக்கற்ற நிறுவனமாகும். இணைய சூழல் அமைப்பை மக்கள் எளிதில் பயன்படுத்த, பல்வேறு உள்கட்டமைப்பு அம்சங்களை எளிதாக்குவதன் மூலம் இந்தியாவில் இணைய செயல்பாடுகளை அதிகரிப்பது இதன் நோக்கமாகும்.