Tue. Dec 24th, 2024

திறன் பெற்ற தொழிலாளர்கள், விரிவடைந்து வரும் சந்தை ஆகியவற்றின் காரணமாக முதலீட்டுக்கான முக்கிய இடமாக ராஜஸ்தான் உருவெடுத்து வருகிறது: பிரதமர்

உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்தியாவைப் பற்றி ஆர்வத்துடன் உள்ளனர்: பிரதமர்

இந்தியாவின் வெற்றி ஜனநாயகம், மக்கள்தொகை, டிஜிட்டல் தரவு மற்றும் விநியோகத்தின் உண்மையான சக்தியை வெளிப்படுத்துகிறது: பிரதமர்

இந்த நூற்றாண்டு தொழில்நுட்பம் சார்ந்ததாகவும், தரவு சார்ந்ததாகவும் உள்ளது: பிரதமர்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கல் ஒவ்வொரு துறையினருக்கும் சமூகத்திற்கும் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது: பிரதமர்

ராஜஸ்தான் எழுச்சி பெறுவதுடன் மட்டுமல்லாமல், நம்பகமானதாகவும் மாறியுள்ளது, ராஜஸ்தான் காலத்திற்கு ஏற்ப தன்னை எவ்வாறு தகவமைத்துக் கொள்வது என்பதை அறிந்துள்ளது: பிரதமர்

இந்தியாவில் வலுவான உற்பத்தி அடித்தளம் இருப்பது முக்கியம்: பிரதமர்

இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன் மட்டுமின்றி, உலகளாவிய விநியோகம் மற்றும் மதிப்பு கூட்டு சங்கிலிகளுக்கு அதிகாரம் அளிப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றி வருகின்றன: பிரதமர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று “எழுச்சி பெறும் ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாடு 2024” மற்றும் ராஜஸ்தான் உலகளாவிய வர்த்தகக் கண்காட்சியை  தொடங்கி வைத்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், ராஜஸ்தானின் வெற்றிப் பயணத்தில் இன்று மற்றுமொரு சிறப்பான நாள் என்று குறிப்பிட்டதோடு ஜெய்ப்பூரில் உள்ள பிங்க் சிட்டியில் நடைபெறும்  ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சி மாநாடு 2024-ல் பங்கேற்ற தொழில்துறை மற்றும் வர்த்தகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், பிரதிநிதிகளுக்கு வாழ்த்தும் தெரிவித்தார். இந்தப் பிரம்மாண்டமான நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ராஜஸ்தான் அரசையும் அவர் பாராட்டினார்.

இந்தியாவின் வர்த்தகச் சூழல் வர்த்தக வல்லுநர்களையும் முதலீட்டாளர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளதாகவும்  செயல்பாடு, மாற்றம் மற்றும் சீர்திருத்தம் ஆகிய தாரக மந்திரத்துடன் இந்தியா கண்டுள்ள முன்னேற்றம் ஒவ்வொரு துறையிலும் காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் 11-வது பெரிய பொருளாதார நாடாக மட்டுமே இந்தியாவால் உயர முடிந்துள்ளது என்று திரு மோடி எடுத்துரைத்தார். ஆனால் கடந்த பத்தாண்டுகளில், இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது என்று திரு மோடி கூறினார். 2014-க்கு முந்தைய பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த பத்தாண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் உள்கட்டமைப்பு செலவினம், கிட்டத்தட்ட ரூ .2 டிரில்லியனில் இருந்து ரூ .11 டிரில்லியனாக அதிகரித்துள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

” ஜனநாயகம், மக்கள்தொகையியல், டிஜிட்டல் தரவு, விநியோகம் ஆகியவற்றின் உண்மையான சக்தியை இந்தியாவின் வெற்றி வெளிப்படுத்துகிறது” என்று பிரதமர் புகழாரம் சூட்டினார்.  இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஜனநாயகத்தின் வெற்றி மற்றும் அதிகாரமளித்தல் ஒரு பெரிய சாதனை என்று அவர் கூறினார். ஜனநாயக நாடாக இருந்துகொண்டே மனித குலத்தின் நலனே இந்தியாவின் தத்துவத்தின் மையமாக உள்ளது என்றும்  அதுதான் இந்தியாவின் அடிப்படைத் தன்மை என்றும் அவர் கூறினார். இந்திய மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தியதற்காகவும், இந்தியாவில் ஒரு நிலையான அரசை உறுதி செய்ததற்காகவும் அவர் பாராட்டினார். இந்தியாவின் இந்தப் பண்டைய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இளைஞர் சக்தியாக விளங்கும் மக்கள் தொகையை திரு மோடி பாராட்டினார். வரவிருக்கும் ஆண்டுகளில் உலகின் இளைய நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்றும், இந்தியா மிகப்பெரும் எண்ணிக்கையிலாஇளைஞர்களையும், ஆகப்பெரும் திறன் கொண்ட இளைஞர் குழுவையும் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திசையில் அரசு பல சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் இளைஞர் சக்தி நமது வலிமைக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்த்துள்ளது என்றும், இந்தப் புதிய பரிமாணம் இந்தியாவின் தொழில்நுட்ப சக்தி மற்றும் தரவு சக்தி என்றும் திரு மோடி குறிப்பிட்டார். இன்றைய உலகில் ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்பம் மற்றும் தரவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு மோடி, “இந்த நூற்றாண்டு தொழில்நுட்பம் மற்றும் தரவு ஆகியவற்றின் உந்துதலைக் கொண்டுள்ளது” என்றார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருவதாகவும் ஜனநாயகம், மக்கள் தொகை மற்றும் தரவுகளின் உண்மையான சக்தியை இந்தியா உலகிற்கு எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டினார். “டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கல் ஒவ்வொரு துறையினருக்கும் சமூகத்திற்கும் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது” என்று திரு மோடி கூறினார். யு.பி.ஐ., நேரடி பலன் பரிமாற்ற அமைப்பு, அரசு இ-சந்தை(ஜெம்), டிஜிட்டல் வர்த்தகத்துக்கான திறந்த நிலை வலைப்பின்னல்  போன்ற இந்தியாவின் பல்வேறு டிஜிட்டல் முன்முயற்சிகளை மேற்கோள் காட்டிய அவர், டிஜிட்டல் சுற்றுச்சூழல்சார் அமைப்பின் சக்தியை வெளிப்படுத்தும் இதுபோன்ற பல தளங்கள் உள்ளன என்றார். அவற்றின் பெரும் தாக்கம் ராஜஸ்தானிலும் தெளிவாகத் தெரியும் என்று அவர் மேலும் கூறினார். நாட்டின் வளர்ச்சி என்பது மாநிலத்தின் வளர்ச்சியின் மூலமே அமைகிறது என்றும், ராஜஸ்தான் தனது வளர்ச்சியில் புதிய உச்சங்களை எட்டும்போது, நாடும் புதிய உச்சங்களை எட்டும் என்றும் திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

பரப்பளவைப் பொறுத்தவரை ராஜஸ்தான் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் என்று குறிப்பிட்ட திரு மோடி, ராஜஸ்தான் மக்களின் பரந்த மனம், கடின உழைப்பு, இயல்பு, நேர்மை, கடினமான இலக்குகளை அடைவதற்கான உறுதி, தேசம் முதலில் என்ற நம்பிக்கை, நாட்டிற்காக எதையும் செய்வதற்கான உத்வேகம் ஆகியவற்றிற்காக ராஜஸ்தான் மக்களைப் பாராட்டினார். சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசுகளின் முன்னுரிமை நாட்டின் வளர்ச்சியோ அல்லது நாட்டின் பாரம்பரியமோ அல்ல என்றும், ராஜஸ்தான் அதன் பாதிப்பை தாங்கிக் கொண்டது என்றும் அவர் கூறினார். ராஜஸ்தானுக்கு பெரிதும் பயனளிக்கும் வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற மந்திரத்தின் அடிப்படையில் தமது அரசு செயல்பட்டு வருவதாக அவர் மேலும் உறுதியளித்தார்.

ராஜஸ்தான் வளர்ந்து வரும் மாநிலம் மட்டுமல்ல, நம்பகமான மாநிலமும் கூட என்று குறிப்பிட்ட பிரதமர், ராஜஸ்தானுக்கு காலத்திற்கேற்ப தன்னை எவ்வாறு தகவமைத்துக் கொள்வது என்பது தெரியும் என்றும் குறிப்பிட்டார். சவால்களை எதிர்கொள்வதற்கும், புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் ராஜஸ்தான் என்பது மற்றொரு பெயர் என்று அவர் கூறினார். ராஜஸ்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புள்ள மற்றும் சீர்திருத்த அரசு என்பது ராஜஸ்தானின் ஆர்-காரணியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது என்று திரு மோடி கூறினார். ராஜஸ்தான் முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினர் அனைவரும் குறுகிய காலத்தில் சிறப்பாக பணியாற்றியதை அவர் பாராட்டினார். மாநில அரசு இன்னும் சில நாட்களில் முதலாம் ஆண்டை நிறைவு செய்யவுள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, ஏழைகள் மற்றும் விவசாயிகள் நலன், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குதல், சாலை, மின்சாரம் போன்ற வளர்ச்சிப் பணிகள் போன்ற பல்வேறு துறைகளில் ராஜஸ்தானின் விரைவான வளர்ச்சியில் முதலமைச்சரின் செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்புக்காக அவரைப் பாராட்டினார். குற்றங்கள் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதில் அரசின் துரித நடவடிக்கை குடிமக்கள் மற்றும் முதலீட்டாளர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

ராஜஸ்தானின் உண்மையான திறனை உணர்ந்து கொள்வது முக்கியம் என்று குறிப்பிட்ட பிரதமர், ராஜஸ்தானில் இயற்கை வளங்கள் கிடங்கு உள்ளது, வளமான பாரம்பரியம், மிகப் பெரிய நிலப்பரப்பு மற்றும் அதிக திறன் கொண்ட இளைஞர் சக்தி ஆகியவற்றுடன் கூடிய நவீன தொடர்பு வலைப்பின்னல் உள்ளது என்று குறிப்பிட்டார். சாலைகள் முதல் ரயில்வே வரை, விருந்தோம்பல் முதல் கைவினைப் பொருட்கள் வரை, பண்ணைகள் முதல் கோட்டைகள் வரை ராஜஸ்தானில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தானின் இந்த வாய்ப்புகள், முதலீட்டுக்கு மிகவும் கவர்ச்சிகரமான இடமாக மாநிலத்தை உருவாக்குகிறது என்று திரு மோடி கூறினார். ராஜஸ்தான் மாநிலம் கற்றலின் தரத்தையும், திறனை அதிகரிக்கும் தரத்தையும் கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, அதனால்தான் தற்போது இங்குள்ள மணற்பாங்கான மணல் குன்றுகள்கூட மரங்களாலும் பழங்களாலும் நிரம்பியுள்ளன என்றும், ஆலிவ் மற்றும் காட்டாமணக்கு சாகுபடி அதிகரித்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். ஜெய்ப்பூரின் நீல நிற மட்பாண்டங்கள், பிரதாப்கரின் தேவா நகைகள் மற்றும் பில்வாராவின் ஜவுளி கண்டுபிடிப்புகள் ஆகியவை வேறுபட்ட பெருமையைக் கொண்டுள்ளன என்றும், மக்ரானா பளிங்கு மற்றும் கோட்டா டோரியா ஆகியவை உலகம் முழுவதும் அறியப்பட்டவை என்றும் அவர் எடுத்துரைத்தார். நாகவுரின் பான் மேத்தியின் வாசனையும் தனித்துவமானது என்றும், ஒவ்வொரு மாவட்டத்தின் திறனையும் அங்கீகரிக்க மாநில அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

துத்தநாகம், ஈயம், தாமிரம், பளிங்கு, சுண்ணாம்புக்கல், கிரானைட், பொட்டாஷ் போன்ற இந்தியாவின் கனிம வளங்களின் பெரும்பகுதி ராஜஸ்தானில் உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இவை தற்சார்பு இந்தியாவின் வலுவான அடித்தளம் என்றும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு ராஜஸ்தான் முக்கிய பங்களிப்பு செய்கிறது என்றும் கூறினார். இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை உருவாக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதை நினைவுபடுத்திய திரு மோடி, இந்தியாவின் பல பெரிய சூரியசக்தி பூங்காக்கள் இங்கு கட்டப்படுவதன் மூலம் ராஜஸ்தான் இதிலும் பெரும் பங்காற்றி வருவதாகக் கூறினார் .

பொருளாதாரத்தின் இரண்டு பெரிய மையங்களான தில்லி மற்றும் மும்பையை ராஜஸ்தான் வட இந்தியாவுடன் இணைத்துள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, 250 கிலோமீட்டர் தூரத்திற்கு தில்லி-மும்பை தொழில் வழித்தடம் ராஜஸ்தானில் உள்ளது என்று குறிப்பிட்டார். இது ராஜஸ்தானின் ஆல்வார், பரத்பூர், தௌசா, சவாய் மாதோபூர், டோங்க், பூந்தி மற்றும் கோட்டா மாவட்டங்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் அவர் கூறினார். அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடம் போன்ற 300 கிலோமீட்டர் நீள நவீன ரயில் கட்டமைப்பு ராஜஸ்தானில் உள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, இந்த வழித்தடம் ஜெய்ப்பூர், அஜ்மீர், சிகார், நாகவுர் மற்றும் ஆல்வார் மாவட்டங்கள் வழியாக செல்கிறது என்றார். இதுபோன்ற பெரிய இணைப்புத் திட்டங்களின் மையமாக ராஜஸ்தான் திகழ்கிறது என்பதை எடுத்துரைத்த பிரதமர், முதலீடு செய்வதற்கு ஏற்ற சிறந்த இடமாக உள்ளது என்றும், குறிப்பாக உலர் துறைமுகங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து துறைக்கு அளப்பரிய வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறினார். பல்வகை சரக்கு போக்குவரத்து பூங்காக்களை அரசு உருவாக்கி வருவதாகவும், குறிப்பிட்ட துறை சார்ந்த 22 தொழில் பூங்காக்களை அரசு உருவாக்கி வருவதாகவும், இரண்டு விமான சரக்கு வளாகங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொழில்துறை இணைப்பை மேலும் மேம்படுத்துவதன் மூலம் ராஜஸ்தானில் தொழிற்சாலைகளை அமைப்பதை எளிதாக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் வளமான எதிர்காலத்தில் சுற்றுலாவின் பெரும் வாய்ப்புகளை வலியுறுத்திய பிரதமர், இந்தியாவில் இயற்கை, கலாச்சாரம், சாகசம், மாநாடு, சுற்றுலாத் தலம், திருமணம் மற்றும் பாரம்பரிய சுற்றுலாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று வலியுறுத்தினார். ராஜஸ்தான் இந்தியாவின் சுற்றுலா வரைபடத்தில் ஒரு முக்கிய மையமாக உள்ளது என்றும், அது வரலாறு, பாரம்பரியம், பரந்த பாலைவனங்கள் மற்றும் பல்வேறு இசை மற்றும் உணவு வகைகளைக் கொண்ட அழகான ஏரிகளைக் கொண்டுள்ளது என்றும், இது சுற்றுலா, பயணம் மற்றும் விருந்தோம்பல் துறையின் தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். திருமணங்களுக்கு வருவதற்கும் வாழ்க்கையின் தருணங்களை மறக்கமுடியாததாக மாற்றவும் மக்கள் விரும்பும் உலகின் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் ராஜஸ்தானும் ஒன்றாகும் என்று அவர் மேலும் கூறினார். ராஜஸ்தானில் வனவிலங்கு சுற்றுலாவுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்ட திரு மோடி, ரண்தம்போர், சரிஸ்கா, முகுந்த்ரா மலைகள், கியோலாடியோ மற்றும் இதுபோன்ற பல இடங்கள் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு விருந்தளிக்கின்றன என்று குறிப்பிட்டார். ராஜஸ்தான் அரசு தனது சுற்றுலாத் தலங்களையும், பாரம்பரிய மையங்களையும் சிறந்த இணைப்பு வசதிகளுடன் பிணைத்து வருவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். 2004 முதல் 2014 வரை சுமார் 5 கோடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும், 2014 முதல் 2024 வரை 7 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும் அவர் எடுத்துக் கூறினார். கோவிட் பெருந்தொற்று காலத்தில் சுற்றுலா தேக்கமடைந்திருந்தபோதிலும், இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது என்று திரு மோடி வலியுறுத்தினார். இந்தியாவுக்கு இ-விசா வசதி பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டிருப்பது வெளிநாட்டு விருந்தினர்களுக்கு பெரிதும் உதவியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இன்று இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலாவும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், உதான் திட்டம், வந்தே பாரத் ரயில்கள், பிரசாத் திட்டம் போன்ற திட்டங்கள் ராஜஸ்தான் மாநிலத்திற்கு பயனளித்துள்ளன என்றார். இந்திய அரசின் துடிப்புமிக்க கிராமம் போன்ற திட்டங்களால் ராஜஸ்தானும் பயனடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். ராஜஸ்தானுக்கும் பயனளிக்கும் வகையில் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று குடிமக்களை திரு மோடி வலியுறுத்தினார். ராஜஸ்தானின் பாரம்பரிய சுற்றுலா, திரைப்பட சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கிராமப்புற சுற்றுலா, எல்லைப் பகுதி சுற்றுலா ஆகியவற்றை விரிவுபடுத்த பெரும் வாய்ப்புகள் உள்ளன என்று அவர் கூறினார். இந்தத் துறைகளில் முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் முதலீடுகள் ராஜஸ்தானின் சுற்றுலாத் துறையை வலுப்படுத்தி, தங்களது வர்த்தகத்தை வளர்க்கவும் உதவும் என்று பிரதமர் முதலீட்டாளர்களை கேட்டுக் கொண்டார்.

உலகளாவிய விநியோகம் மற்றும் மதிப்புச் சங்கிலி தொடர்பாக தற்போதுள்ள சவால்களைத் தொகுத்துப் பேசிய பிரதமர், மிகப் பெரிய நெருக்கடியின் போதும் தடையின்றிச் செயல்படும் ஒரு அமைப்பு இன்று உலகிற்கு தேவைப்படுகிறது என்று கூறினார். இதற்கு,  இந்தியாவில் ஒரு பெரிய உற்பத்தி அடித்தளத்தை வைத்திருப்பது அவசியம் என்றும், இது இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலகப் பொருளாதாரத்திற்கும் அவசியம் என்றும் அவர் கூறினார். இந்தப் பொறுப்பைப் புரிந்துகொண்டு, உற்பத்தித் துறையில் தற்சார்பு அடைவதற்கான உறுதிமொழியை இந்தியா எடுத்துள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் குறைந்த செலவில் உற்பத்தி செய்ய இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள், மின்னணு பொருட்கள் மற்றும் சாதனை உற்பத்தி ஆகியவை உலகிற்கு பெரும் பயனளித்துள்ளன என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டில் ராஜஸ்தானில் இருந்து பொறியியல் பொருட்கள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், ஜவுளி, கைவினைப் பொருட்கள், வேளாண் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 84,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார்.

இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் திட்டத்தின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருவதை வலியுறுத்திய பிரதமர், இன்று மின்னணுவியல், சிறப்பு எஃகு, ஆட்டோமொபைல்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள், சூரிய ஒளி வாகனங்கள், மருந்துகள் ஆகிய துறைகளில் மிகுந்த உற்சாகம் இருப்பதாக கூறினார். பி.எல்.ஐ திட்டம் சுமார் ரூ .1.25 லட்சம் கோடி முதலீடு செய்ய வழிவகுத்துள்ளது, சுமார் ரூ .11 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன மற்றும் ஏற்றுமதியில் ரூ .4 லட்சம் கோடி அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மின்சார வாகன உற்பத்திக்கு ஏராளமான வாய்ப்புகளுடன் வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தொழிலுக்கு ராஜஸ்தானும் ஒரு நல்ல அடித்தளத்தை தயார் செய்துள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார். மின்னணு உற்பத்திக்குத் தேவையான உள்கட்டமைப்பு ராஜஸ்தானில் உள்ளது என்றும் அவர் கூறினார். ராஜஸ்தானின் உற்பத்தித் திறனை முதலீட்டாளர்கள் நிச்சயமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திரு மோடி வலியுறுத்தினார்.

எழுச்சியுறும் ராஜஸ்தான் மிகப் பெரிய பலம் என்று குறிப்பிட்ட பிரதமர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்தியாவில் முதல் 5 மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று என்றார். தற்போது நடைபெற்று வரும் உச்சிமாநாட்டில் எம்.எஸ்.எம்.இ.க்கள் குறித்து ஒரு தனி மாநாடும் நடத்தப்பட உள்ளது என்றும் அவர் கூறினார். ராஜஸ்தானில் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழில்கள் இருப்பதாகவும், 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிறு தொழில்களில் பணியாற்றுவதாகவும் திரு மோடி குறிப்பிட்டார். இது ராஜஸ்தானின் நிலைமையை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். குறுகிய காலத்திற்குள் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கொள்கையை அரசு அறிமுகப்படுத்தியதில் திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். மத்திய அரசு தனது கொள்கைகள் மற்றும் முடிவுகள் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார். “இந்தியாவின் எம்.எஸ்.எம்.இ-க்கள் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உலகளாவிய வழங்கல் மற்றும் மதிப்புச் சங்கிலிகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன” என்று பிரதமர் கூறினார். கோவிட் பெருந்தொற்றின் போது மருந்து தொடர்பான விநியோகச் சங்கிலி நெருக்கடியை நினைவுகூர்ந்த திரு மோடி, இந்தியாவின் மருந்துத் துறை அதன் வலுவான அடித்தளத்தின் காரணமாக உலகிற்கு உதவியது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். அதேபோல், மற்ற பொருட்களின் உற்பத்திக்கு இந்தியாவை வலுவான அடித்தளமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நமது எம்.எஸ்.எம்.இ.க்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வரையறையை மாற்றி, அவர்கள் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகளைப் பெறுவதற்கான அரசின் முயற்சிகளை சுட்டிக் காட்டிய திரு மோடி, மத்திய அரசு சுமார் 5 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை முறையான பொருளாதாரத்துடன் இணைத்துள்ளதால், அவர்கள் கடன் பெறுவதை எளிதாக்கியுள்ளது என்றார்.

கடன் இணைக்கப்பட்ட உத்தரவாதத் திட்டம் ஒன்றையும், அரசு தொடங்கியிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்தத் திட்டத்தின் கீழ் சிறு தொழில்களுக்கு சுமார் ரூ.7 லட்சம் கோடி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் வரத்து இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, 2014-ல் இது ரூ.10 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இன்று அது ரூ.22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றார். இதனால் ராஜஸ்தானும் பெரும் பயனடைந்துள்ளது என்றும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் இந்த வளர்ந்து வரும் வலிமை ராஜஸ்தானின் வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் அவர் கூறினார்.

தற்சார்பு இந்தியாவின் புதிய பயணத்தை நாம் தொடங்கியுள்ளோம்” என்று பிரதமர் கூறினார். தற்சார்பு இந்தியா இயக்கத்தின் பார்வை உலகளாவியது என்றும், அதன் தாக்கம் உலகளாவியதாகவும் உள்ளது என்றும் அவர் கூறினார். அரசு மட்டத்தில் ஒட்டுமொத்த அரசு அணுகுமுறையுடன் அவர்கள் முன்னேறி வருவதாக திரு மோடி தெரிவித்தார். தொழில் மற்றும் உற்பத்தி வளர்ச்சிக்கான ஒவ்வொரு துறையையும், ஒவ்வொரு காரணியையும் அரசு ஊக்குவித்து வருவதாகவும் அவர் கூறினார். அனைவரும் உயர்வோம் என்ற இந்த உணர்வு வளர்ச்சியடைந்த ராஜஸ்தானையும், வளர்ச்சியடைந்த இந்தியாவையும் உருவாக்கும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

எழுச்சியுறும் ராஜஸ்தான் தீர்மானத்தை அனைத்து முதலீட்டாளர்களும் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள பிரதிநிதிகள் ராஜஸ்தான் மற்றும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார், இது அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று கூறி தமது உரையை பிரதமர் நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் ஆளுநர் திரு. ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. பஜன்லால் சர்மா, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பின்னணி

இந்த ஆண்டு டிசம்பர் 9 முதல் 11 வரை நடைபெறவுள்ள முதலீட்டு உச்சிமாநாட்டின் கருப்பொருள் ‘நிறைவு, பொறுப்பு, தயார்நிலை’ என்பதாகும். நீர் பாதுகாப்பு, நீடித்த சுரங்கம், நீடித்த நிதி, அனைவரையும் உள்ளடக்கிய சுற்றுலா, வேளாண் வணிக கண்டுபிடிப்புகள் மற்றும் பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட கருப்பொருள்கள் குறித்து 12 துறை சார்ந்த கருப்பொருள் அமர்வுகளை இந்த உச்சிமாநாடு நடத்தும். ‘வாழக்கூடிய நகரங்களுக்கான நீர் மேலாண்மை’, ‘தொழில்களின் பன்முகத்தன்மை- உற்பத்தி மற்றும் அதற்கு அப்பால்’ மற்றும் ‘வர்த்தகம் மற்றும் சுற்றுலா’ போன்ற கருப்பொருள்களில் பங்கேற்கும் நாடுகளுடன் எட்டு அமர்வுகளும் இந்த உச்சிமாநாட்டின் போது நடைபெறும்.

வெளிநாடுவாழ் ராஜஸ்தானி மாநாடு, எம்.எஸ்.எம்.இ மாநாடு ஆகியவையும் மூன்று நாட்களில் நடைபெறும். ராஜஸ்தான் உலகளாவிய வர்த்தக கண்காட்சியில் ராஜஸ்தான் அரங்கு, உள்நாட்டு அரங்குகள், புத்தொழில் நிறுவன அரங்கு போன்ற கருப்பொருள் அரங்குகள் இடம்பெறும். இந்த மாநாட்டில் 16 பங்குதாரர் நாடுகள் மற்றும் 20 சர்வதேச அமைப்புகள் உட்பட 32-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன.


ராஜஸ்தான் உலக முதலீட்டு உச்சிமாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta