சர்வதேச வர்த்தக கண்காட்சி 2024 நவம்பர் மாதம் 27-ந் தேதி நிறைவுபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்காட்சியை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர். இக்கண்காட்சி வர்த்தக நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக அமைந்தது.
இந்தக் கண்காட்சியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவில் புதுச்சேரி தங்கப் பதக்கத்தையும், மேகாலயா, வெள்ளிப் பதக்கத்தையும் கர்நாடகா வெண்கலப் பதக்கத்தையும் பெற்றன. பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் திரிபுராவுக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாநில அளவிலான கருத்துரு விளக்கக்காட்சி பிரிவில், மத்தியப் பிரதேசம் தங்கப் பதக்கத்தையும், ஒடிசா வெள்ளிப் பதக்கத்தையும், அசாம் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றன. மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சியில், மக்களிடையே தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காகவும் தூய்மை இந்தியா இயக்கத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்காகவும் இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தூய்மை பராமரிப்புக்கான விருதுப் போட்டியில் கோவாவுக்கு தங்கப்பதக்கமும், கேரளாவுக்கு வெள்ளி பதக்கமும், ஹரியானாவுக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டன. உத்தராகண்ட், குஜராத் மாநிலங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பல்வேறு அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் வர்த்தக வாரியங்கள் பிரிவில், இந்திய ரிசர்வ் வங்கி தங்கப் பதக்கத்தையும், பஞ்சாப் நேஷனல் வங்கி வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன. கோல் இந்தியா நிறுவனம், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவற்றிற்கு சிறப்பு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.