வணக்கம் நண்பர்களே,
இது குளிர்கால கூட்டத்தொடர் என்பதால், வளிமண்டலமும் குளிர்ச்சியாக இருக்கும். நாம் 2024-ம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். 2025-ம் ஆண்டை மிகுந்த ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் வரவேற்க நாடு ஆவலுடன் தயாராகி வருகிறது.
நண்பர்களே,
நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடர், பல வழிகளில் சிறப்பு வாய்ந்தது. 75-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 75 ஆண்டுகால பயணம் மிக முக்கியமான அம்சமாகும். இது ஜனநாயகத்திற்கு மிக முக்கியமான தருணம். நாளை, நாம் அனைவரும் இணைந்து அரசியலமைப்புச் சட்ட அரங்கில் நமது அரசியலமைப்பின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தைத் தொடங்குவோம். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோது ஒவ்வொரு அம்சத்தையும் மிக விரிவாக விவாதித்தனர். இதன் விளைவாக இந்த சிறந்த ஆவணம் உருவானது. இதன் முக்கிய தூண் நமது நாடாளுமன்றமும் அதன் உறுப்பினர்களும். முடிந்தவரை அதிகமானோர் பங்களிக்கும் ஆரோக்கியமான விவாதங்களில் நாடாளுமன்றம் ஈடுபடுவது அவசியம். துரதிர்ஷ்டவசமாக, மக்களால் நிராகரிக்கப்பட்ட சில தனிநபர்கள், தங்கள் அரசியல் லாபங்களுக்காக சீர்குலைவு தந்திரோபாயங்கள் மூலம் நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சிக்கின்றனர். நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்துவது என்ற அவர்களின் நோக்கம் அரிதாகவே நிறைவேற்றும் . மேலும், மக்கள் அவர்களின் செயல்களைக் கவனத்தில் கொள்கிறார்கள். நேரம் வரும்போது பெரும்பாலும் அவர்களைத் தண்டிக்கிறார்கள்.
எவ்வாறாயினும், மிகவும் கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், இத்தகைய நடத்தை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதிக்கிறது. அவர்கள் அனைத்து கட்சிகளிடமிருந்தும் புதிய யோசனைகளையும் ஆற்றலையும் கொண்டு வருகிறார்கள். இந்த புதிய உறுப்பினர்களுக்கு அவையில் பேசுவதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் மறுக்கப்படுகின்றன. ஜனநாயக மரபுப்படி, ஒவ்வொரு தலைமுறையினருக்கும் அடுத்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு உள்ளது. ஆனால், மக்களால் மீண்டும் மீண்டும் 80, 90 முறை நிராகரிக்கப்பட்டவர்கள், நாடாளுமன்றத்தில் விவாதங்களை அனுமதிப்பதில்லை. ஜனநாயக கோட்பாடுகளையோ அல்லது மக்களின் விருப்பங்களையோ மதிப்பதில்லை. மக்களுக்கான தங்கள் பொறுப்பை அவர்கள் உணர்வதில்லை. இதன் விளைவாக, அவை தொடர்ந்து பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் தோல்வியடைகிறது. இது வாக்காளர்களால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கிறது.
நண்பர்களே,
இந்த அவை ஜனநாயகத்திற்கு ஒரு சான்று. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நாட்டு மக்கள் தங்கள் எண்ணங்கள், பார்வைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த அந்தந்த மாநிலங்களில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். மாநிலங்களில் இந்தத் தேர்தல் முடிவுகள் 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளன. ஆதரவு தளத்தை விரிவுபடுத்தியுள்ளதுடன், ஜனநாயக செயல்முறைகளில் நம்பிக்கையை அதிகரித்துள்ளன. ஜனநாயகத்தில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதும், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அயராது உழைப்பதும் நமக்கு கட்டாயமாகும். நான் பலமுறை எதிர்க்கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளேன். சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுகிறார்கள். சபையின் சுமூகமான செயல்பாட்டையும் அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், மக்களால் நிராகரிக்கப்படுபவர்கள் தங்கள் சகாக்களின் குரல்களைக் கூட நசுக்குகிறார்கள். அவர்களின் உணர்வுகளை அவமதிக்கிறார்கள். ஜனநாயகத்தின் உணர்வைக் குறைத்து மதிப்பிடுகின்றனர்.
அனைத்துக் கட்சிகளில் இருந்தும் புதிய உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். அவர்கள் பாரதத்தை முன்னேற்ற புதிய யோசனைகளையும், புதுமையான தொலைநோக்குப் பார்வையையும் கொண்டு வருகிறார்கள். இன்று, உலகம் பாரதத்தை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில், பாரதத்தின் உலகளாவிய மரியாதை மற்றும் ஈர்ப்பை மேலும் மேம்படுத்த நமது நேரத்தை நாம் பயன்படுத்த வேண்டும். இன்று பாரதத்தில் இருப்பது போன்ற வாய்ப்புகள், உலக அரங்கில் அரிதானவை. பாரதத்தின் நாடாளுமன்றம் குறித்த செய்தியானது ஜனநாயகத்தின் மீதான வாக்காளர்களின் அர்ப்பணிப்பு, அரசியலமைப்பின் மீதான அவர்களின் உறுதிப்பாடு மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகள் மீதான அவர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்க வேண்டும். அவர்களின் பிரதிநிதிகளாகிய நாம், இந்த உணர்வுகளுக்கு ஏற்ப வாழ வேண்டும். இதுவரை நாம் இழந்த நேரத்தை பிரதிபலிக்க வேண்டிய நேரம் இது. மேலும், சபையில் பல்வேறு பிரச்சனைகளை முழுமையாக விவாதிப்பதன் மூலம் ஈடுசெய்ய தீர்மானிக்க வேண்டிய நேரம் இது. எதிர்கால சந்ததியினர் இந்த விவாதங்களை படித்து உத்வேகம் பெறுவார்கள். இந்த கூட்டத்தொடர் மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும், அரசியலமைப்பின் 75-வது ஆண்டின் கவுரவத்தை மேம்படுத்தும், இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தை வலுப்படுத்தும், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும், புதிய சிந்தனைகளை வரவேற்கும் என்று நான் நம்புகிறேன். இந்த உணர்வுடன், இந்தக் கூட்டத்தொடரை உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் அணுகுமாறு மதிப்பிற்குரிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொண்டு வரவேற்கிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
வணக்கம்!