Tue. Dec 24th, 2024

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பை உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும் ஒட்டுமொத்த தொழில்துறை மற்றும் மதிப்புக் கூட்டல் சங்கிலியை ஒரே புள்ளியில் பிரதிபலிக்கும் வகையில் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும் இதன் மூலம் சந்திப்பு, ஊக்குவிப்பு, மாநாடு, கண்காட்சிக்கான சிறந்த இடமாக இந்தியாவை உலக நாடுகள் காணும் என்றும் கூறினார். பெங்களூர், மும்பை, சென்னை, லக்னோ, வாரணாசி மற்றும் நொய்டா ஆகிய இடங்களில் இந்த வசதிகளை விரிவுபடுத்த மத்திய அரசு எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார். அரசின் ஒவ்வொரு முடிவையும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தீர்மானத்தைக் குறிப்பிட்ட திரு கோயல், வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் கருப்பொருள் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அனைத்து வர்த்தக கண்காட்சிகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய திரு கோயல், விரைவான பரிவர்த்தனைகளை செயல்படுத்த கண்காட்சிகளைச் சுற்றி அதற்கான வசதிகளை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் இதுபோன்ற நிகழ்வுகளில் சந்தையை விரும்பும் தொழில்களுடன் வருவாய்ப் பகிர்வு மாதிரிகளையும் மத்திய அரசு கவனித்து வருகிறது என்று அவர் கூறினார். உள்ளூரில் இருந்து உலகளவில் செல்ல வேண்டியதன் அவசியத்தையும், நுகர்வோர் தேர்வுக்காக சர்வதேச கண்காட்சியாளர்களை இந்தியாவுக்கு கொண்டு வந்து வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்தியாவில் நடைபெறும் கண்காட்சியானது உலகிற்கான ஒருதளமாக அமைய வேண்டும் என்று அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.

இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட, 2024 நவம்பர் 14 முதல் 27 வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த முதன்மை நிகழ்வு, இந்தியாவின் துடிப்பான கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் புதுமையைக் கொண்டாடுகிறது. வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வாய்ப்புகளை ஆராய்வதற்கும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் ஒரு தளத்தை வழங்குகிறது.

சுமார் 1,07,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 3,500-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். இது உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கான ஒருங்கிணைப்பு புள்ளியாக செயல்படுகிறது. வணிகத்திலிருந்து வணிகம் மற்றும் வணிகத்திலிருந்து நுகர்வோர் என்ற வகைப்பாட்டு ஈடுபாடுகளை வளர்க்கிறது. தெற்காசியாவின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சிகளில் ஒன்றாக தன் நிலையை பிரதிபலிக்கும் இந்தக் கண்காட்சிக்கு நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024 நவம்பர் 14 முதல் 18 வரை வணிக நாட்களிலும், நவம்பர் 19 முதல் 27 வரை பொது பார்வையாளர் நாட்களிலும் கண்காட்சியை பார்வையிடலாம்.


43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta