குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஐந்தாவது தேசிய நீர் விருதுகளை இன்று (அக்டோபர் 22, 2024), புதுதில்லியில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், தண்ணீர் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படைத் தேவை மற்றும் அடிப்படை மனித உரிமை என்று தெரிவித்தார். தூய்மையான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யாமல் தூய்மையான, வளமான சமூகத்தை உருவாக்க முடியாது. தண்ணீர் கிடைக்காமை மற்றும் மோசமான துப்புரவு வசதி ஆகியவை பின்தங்கிய மக்களின் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பூமியில் நன்னீர் வளங்கள் குறைந்த அளவில்தான் கிடைக்கின்றன என்பதை அனைவரும் அறிந்திருந்த போதிலும், நீர் சேமிப்பு மற்றும் மேலாண்மையை நாம் புறக்கணிக்கிறோம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். மனிதனால் உருவாக்கப்பட்ட காரணங்களால் இந்த வளங்கள் மாசுபட்டு குறைந்து வருகின்றன. நீர் சேமிப்புக்கும் நீர் சேகரிப்பை ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
நீர் சேமிப்பு என்பது நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்று குடியரசுத் தலைவர் கூறினார். நம் முன்னோர்கள் கிராமங்களுக்கு அருகில் குளம் கட்டுவார்கள். அவர்கள் கோயில்களிலோ அல்லது அருகிலோ நீர்த்தேக்கங்களைக் கட்டினர், இதனால் சேமிக்கப்பட்ட நீரை நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டால் பயன்படுத்த முடியும். துரதிர்ஷ்டவசமாக, நாம் நம் முன்னோர்களின் ஞானத்தை மறந்து வருகிறோம். சிலர் சொந்த லாபத்திற்காக நீர்த்தேக்கங்களை ஆக்கிரமித்துள்ளனர். இது வறட்சியின் போது நீர் கிடைப்பதை பாதிப்பது மட்டுமல்லாமல், அதிக மழை பெய்யும் போது வெள்ளம் போன்ற சூழ்நிலைகளையும் உருவாக்குகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நீர் வளங்களை பாதுகாத்து மேம்படுத்துவது அனைவரது கூட்டுப் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். நமது தீவிர பங்களிப்பு இல்லாமல், தண்ணீர் வளமிக்க இந்தியாவை உருவாக்க முடியாது. சிறிய முயற்சிகள் மூலம் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்க முடியும் என்று அவர் எடுத்துரைத்தார். உதாரணமாக, நாம் நமது வீடுகளின் குழாய்களைத் திறந்து வைக்கக்கூடாது, மேல்நிலை நீர்த் தொட்டியிலிருந்து தண்ணீர் வழிந்து விடக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும், வீடுகளில் நீர் சேகரிப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், பாரம்பரிய நீர்த்தேக்கங்களை கூட்டாக புதுப்பிக்க வேண்டும் என்று அவர் கூறினார். ,
நீர்வளம் தொடர்பான பொருத்தமான அணுகுமுறைகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்கான பாராட்டத்தக்க நடவடிக்கையாக தேசிய நீர் விருதுகள் உள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்த நிகழ்வின் மூலம் விருது பெற்றவர்களின் சிறந்த நடைமுறைகள் மக்களைச் சென்றடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தேசிய நீர் விருதுகள், மக்களிடையே நீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், சிறந்த நீர் பயன்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற அவர்களை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த கிராம ஊராட்சி, சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, சிறந்த பள்ளி அல்லது கல்லூரி, சிறந்த தொழில், சிறந்த முறையில் நீரைப் பயன்படுத்துவோர் சங்கம், சிறந்த நிறுவனம் (பள்ளி அல்லது கல்லூரி தவிர), மற்றும் சிறந்த சிவில் சமூகம் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.