மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்குட்பட்ட அனைத்து ஊழியர்களின் இணையவழிக் கற்றலுக்கு உதவும் விதமாக, ஐகாட் (iGOT) எனப்படும் ஒருங்கிணைந்த அரசு இணையவழிப் பயிற்சி தளம் ஒன்றை ஏற்படுத்துமாறு, இந்த அமைச்சகத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு எல் முருகன் அறிவுறுத்தியுள்ளார். அமைச்சகத்தின் வருடாந்திர திறன் உருவாக்க அட்டவணை மற்றும் ஐகாட் தளத்தில் சேரும் ஊழியர்களின் நிலவரம் குறித்த விரிவான ஆய்வுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ மற்றும் பிற உயர் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எல் முருகன், அமைச்சகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் அக்டோபர் 19-ம் தேதிக்குள் ஐகாட் தளத்தில் இணைய வேண்டுமென அறிவுறுத்தினார். ஊழியர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் விதமாக, பட்ஜெட் மேலாண்மை, பாலின உணர்திறன், தலைமைப் பண்பு மற்றும் குழு உருவாக்கம் உள்ளிட்ட 16 வகையான பயிற்சிகளை இந்தத் தளத்தில் சேர்க்க அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
ஊழியர்கள் இதில் பங்கேற்பதை ஊக்குவிக்க, ஒவ்வொரு காலாண்டிலும், மிக அதிக எண்ணிக்கையிலான பயிற்சிகளை முடிக்கும் ஊழியர்களுக்கு உதவுவதுடன், அமைச்சகத்தின் கற்றல் திட்டம் மற்றும் துறையின் உத்திகளை அனைத்து ஊடகப் பிரிவுகளுக்கும் திறம்பட தெரிவிக்கும் வகையில் பயிலரங்கம் ஒன்றை நடத்தவும் முடிவு செய்துள்ளது.
மேலும் தகவல் உரிமைச் சட்ட விண்ணப்பங்கள் மற்றும் கோரிக்கைகளை அமைச்சகம் கையாளும் விதம் குறித்தும் ஆய்வு செய்த மத்திய அமைச்சர், அரசின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்யும் விதமாக, அனைத்துப் பிரச்சனைகளுக்கும் குறித்த காலத்தில் தீர்வு காணப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.