பொருளாதார தேசியவாதத்தை தழுவுமாறு மக்களை குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கேட்டுக் கொண்டுள்ளார். தவிர்க்க வாய்ப்புள்ள இறக்குமதிப் பொருட்களின் இறக்குமதியைக் குறைத்து அவற்றின் உள்ளூர் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்குமாறு தொழில் வர்த்தகத் துறையினருக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திர மாநிலம் வெங்கடாசலத்தில் உள்ள ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையில் நடைபெற்ற 23-வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், சுதேசியின் ஒரு அம்சமாக பொருளாதார தேசியவாதம் என்ற கருத்தை வலியுறுத்தினார். அந்நியச் செலாவணி வெளியேற்றம், இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் இழப்பு உள்ளிட்டவை, தேவையற்ற இறக்குமதிகளால் ஏற்படும் எதிர்மறைத் தாக்கங்கள் என அவர் எடுத்துரைத்தார். உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இந்த பிரச்சினையைத் தீர்க்குமாறு அவர் தொழில்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தார். இது இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதோடு தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இயற்கை வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கான தேவையை அவர் சுட்டிக் காட்டினார். நிதி அதிகாரத்தை விட தேவையின் அடிப்படையில் வளங்களைப் பயன்படுத்துமாறு மக்களை அவர் வலியுறுத்தினார்.
பொறுப்பற்ற செலவினங்கள் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வை பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். பணத்தின் சக்தியை வைத்து தேவையில்லாமல் செலவு செய்தால், எதிர்கால சந்ததியினருக்கு அது சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
அரசியல், சுய மற்றும் பொருளாதார நலன்களை விட நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த திரு ஜக்தீப் தன்கர், அனைவரது மனநிலையிலும் இந்த மாற்றம் எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தேச ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் உறுதியான நடவடிக்கைகளின் அவசரத் தேவையையும் எடுத்துரைத்தார்.
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு மீதான தமது ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்திய குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், தேசத்தின் நலனுக்காக திரு வெங்கையா நாயுடுவின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். அவர் தொடங்கிய இந்த அறக்கட்டளை பல நல்ல பணிகளைச் செய்து வருவதாகத் திரு ஜக்தீப் தன்கர் பாராட்டுத் தெரிவித்தார்.