இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆகஸ்ட் 18, 2024 அன்று புதுதில்லியில் உணவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு குறித்த அதிகரித்து வரும் கவலையை சமாளிக்க ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சர்க்கரை, உப்பு போன்ற பொதுவான உணவுப் பொருட்களில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதை உணவு மற்றும் வேளாண் அமைப்பின் சமீபத்திய அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. மைக்ரோபிளாஸ்டிக்கின் உலகளாவிய பரவலை இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டும் அதே வேளையில், குறிப்பாக இந்திய சூழலில், மனித ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கான தாக்கங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள இன்னும் வலுவான தரவுகளின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
நாட்டின் உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறையாளராக, இந்திய நுகர்வோருக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உறுதிபூண்டுள்ளது. உலகளாவிய ஆய்வுகள் பல்வேறு உணவுகளில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதை எடுத்துக்காட்டினாலும், இந்தியாவுக்கென குறிப்பிட்ட நம்பகமான தரவை உருவாக்க வேண்டியது அவசியமாகும். இந்தத் திட்டம் இந்திய உணவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவைப் புரிந்துகொள்ள உதவும். பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க பயனுள்ள விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு தரங்களை உருவாக்க வழிகாட்டும்.
இந்தத் திட்டத்தின் கண்டுபிடிப்புகள் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிவிப்பது மட்டுமின்றி, மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு குறித்த உலகளாவிய புரிதலுக்கும் பங்களிக்கும். இந்த சுற்றுச்சூழல் சவாலை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்திய ஆராய்ச்சியை மாற்றும்.