மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு சி.ஆர். பாட்டீல் தூய்மை கங்கை இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து புதுதில்லியில் ஆய்வு செய்தார். ஜல்சக்தித் துறை இணையமைச்சர் திரு ராஜ் பூஷன் சவுத்ரியும் இந்த ஆய்வில் பங்கேற்றார். துறையின் செயலாளர் திருமதி தேபாஸ்ரீ முகர்ஜி, தூய்மை கங்கை தேசிய இயக்கத்தின் தலைமை இயக்குநர் திரு ராஜீவ் குமார் மிட்டல் மற்றும் மூத்த அதிகாரிகளும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கங்கையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றித் தூய்மைசெய்யும் அவிரல் கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மை கங்கை இயக்கத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு கண்காணிப்பு அமைப்புக்கான (இ-ஃப்ளோ) இணையதளம் இந்த ஆய்வு கூட்டத்தின் போது அமைச்சர் திரு பாட்டீல் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
கங்கை, யமுனை மற்றும் அவற்றின் துணை நதிகளின் நீரின் தரம் குறித்து பகுப்பாய்வு செய்து அறிந்துகொள்ள இந்தத் தளம் உதவும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
மின்னணு கண்காணிப்பு அமைப்பின் மூலம் தூய்மை கங்கை இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் 11 பிரதான திட்டங்களின் முக்கிய அளவுருக்கள் கண்காணிக்கப்படும்.
கங்கை மற்றும் அதன் துணை நதிகள் தொடர்பான தூய்மை கங்கை இயக்கத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்டங்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் திரு பாட்டீல் வலியுறுத்தினார்.