வரவிருக்கும் கரீஃப் பருவத்திற்கான தயார் நிலைகள் குறித்து மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் இன்று பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். கரீஃப் பருவ பயிர்களுக்கு உரிய நேரத்தில் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார்.
இடுபொருட்கள் விநியோகத்தில் குறைபாடுகள் ஏற்பட்டால் விதைப்பு செய்வது தாமதமாகும் என்றும், இது உற்பத்தியை பாதிக்கும் என்றும் கூறிய அமைச்சர், இதனை தவிர்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்தக் கூட்டத்தில், உரங்கள் துறை, மத்திய நீர் ஆணையம், இந்திய வானிலை துறை ஆகியவற்றின் அதிகாரிகள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். கரீஃப் பருவத்திற்கான தயார் நிலைகள் குறித்து வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் திரு மனோஜ் அஹூஜா எடுத்துரைத்தார்.
முன்னதாக வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையின் செயல்பாடு குறித்து அமைச்சர் திரு சௌகான் ஆய்வு செய்தார். வேளாண் கல்வியுடன் வேளாண் தொழில் முறையை இணைக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்த அமைச்சர், அப்போது தான் வேளாண் அறிவியலில் உயர் கல்வி பெறும் போது வேளாண் நடைமுறைகளுடன் இணைப்பு ஏற்படும் என்று கூறினார். 100 நாள் திட்டத்தின் பகுதியாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் 100 பயிர் வகைகளை உருவாக்குவது பற்றியும், 100 புதிய தொழில்நுட்பங்களுக்கு சான்றிதழ் அளிப்பது பற்றியும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2025321