நாட்டில் சைபர் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு சட்ட, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக கொள்கை அளவிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சைபர் குற்றங்களைத் தடுக்க நாடு தழுவிய ஒருங்கிணைந்த அமைப்பை மத்திய அரசு நிறுவியுள்ளது. இதன்படி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் கீழ் உள்ள தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பல்வேறு முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்வார்.
தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையம் நாட்டில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கண்டறியும் கட்டுப்பாட்டு அறையாக செயல்படுகிறது.
சைபர் குற்றங்களை கையாள்வதற்காக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு 70A இன் விதிகளின் கீழ், நாட்டில் முக்கிய தகவல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக தேசிய தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையத்தை அரசு நிறுவியுள்ளது.
தேசிய சைபர் பாதுகாப்புக் கொள்கை பொதுமக்கள், தொழில்துறையினர் மற்றும் அரசுக்கான பாதுகாப்பான தகவல் உள்கட்டமைப்பைப் பாதுகாத்தல், சைபர் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் திறன்களை உருவாக்குதல், ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்டது.
கேள்வி ஒன்றுக்கு மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116341