பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், ஜவஹர்லால் நேரு துறைமுகம் (பகோட்) தொடங்கி மகாராஷ்டிராவில் சவுக் (29.219 கிலோமீட்டர்) வரை 6 வழி அணுகல் கட்டுப்பாட்டு பசுமை (கிரீன்ஃபீல்ட்) அதிவேக தேசிய நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம் ₹ 4500.62 கோடி மூலதன செலவில் கட்டுதல், இயக்குதல், மாற்றித் தருதல் என்ற முறைப்படி அமைக்கப்படும்.
பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டக் கோட்பாடுகளின் கீழ் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு திட்டமிடலின் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்று இந்தியாவில் பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களுடன் சாலை வசதியை இணைக்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாகும். ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் கொள்கலன் அளவு அதிகரித்து வருவதாலும், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் வளர்ச்சியாலும், இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை இணைப்பை மேம்படுத்துவதற்கான தேவை உள்ளது.
புதிய 6 வழி பசுமை வழித்தடம் சிறந்த துறைமுக இணைப்புக்கு வழிவகுக்கும். பாதுகாப்பான, திறன் வாய்ந்த சரக்குப் போக்குவரத்துக்கும் உதவும். இந்தத் திட்டம் மும்பை, புனே அதைச் சுற்றியுள்ள வளரும் பிராந்தியங்களில் செழிப்புக்கான புதிய வழிகளை திறக்கும்.