Sat. Apr 5th, 2025

ஃபிட் இந்தியா சண்டே ஆன் சைக்கிள் எனப்படும் உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டும் நிகழ்வு நாடு முழுவதும் பல இடங்களில் இன்று (16.03.2025) நடைபெற்றது. மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று அகமதாபாத்தில் உள்ள புகழ்பெற்ற சபர்மதி ஆற்றங்கரையில் இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்தார். மருத்துவ சங்கத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு ஹஸ்முக்பாய் படேல், தினேஷ்பாய் மக்வானா உட்பட சுமார் 650 சைக்கிள் ஓட்டுபவர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை பாராலிம்பிக் தடகள வீராங்கனை பாவனா சவுத்ரி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தமது உரையில், “ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் ஓட்டுதல்” நிகழ்வு குறித்துத் தமது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். நாடு முழுவதும் ஃபிட் இந்தியா இயக்கம் வரவேற்பைப் பெற்று வருவதாகவும், “சண்டே ஆன் சைக்கிள்” எனப்படும் ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வு, படிப்படியாக ஒரு கலாச்சார நிகழ்வாக மாறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று நாட்டில் 5,000-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிகழ்வு நடைபெற்றது என்றும், உடல் பருமன் இல்லாத இந்தியாவை உருவாக்க பலர் தீவிரமாக இதில் இணைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடைகளுக்குச் செல்வது போன்ற எளிய பணிகளுக்காக அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று திரு மாண்டவியா குறிப்பிட்டார். உடல் தகுதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசுபாட்டைக் குறைப்பது ஆகியவற்றுக்காக சைக்கிள் ஓட்டுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட உடல் பருமனுக்கு எதிரான இயக்கத்தில் சைக்கிள் ஓட்டுதல் எவ்வாறு ஒரு முக்கிய கருவியாக உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். மேலும் சைக்கிள் ஓட்டுதல் எதிர்காலத்தில் கார்பன் கிரெடிட் திட்டங்களுடன் இணைக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான வழிமுறையாக சைக்கிள் ஓட்டுவதை பரிந்துரைக்க மருத்துவர்களை ஊக்குவித்த அவர், நோயாளிகள் தங்கள் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக சைக்கிள் ஓட்டுவதை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆரோக்கியமான நபர்தான் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும் எனவும் ஆரோக்கியமான சமூகம் ஒரு வளமான தேசத்தை உருவாக்க முடியும் என்றும் திரு மாண்டவியா கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலை நோக்குப் பார்வையை அடைவதற்கு நாடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.


மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அகமதாபாத்தில் ‘உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிளிங்’ நிகழ்வுக்குத் தலைமை வகித்தார்
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta