குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவவிரத், குஜராத்தின் ஹலோலில் உள்ள குஜராத் இயற்கை வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இயற்கை விவசாயம் குறித்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கை இன்று (23.01.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், இயற்கை விவசாயம் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு விவசாயிகள் வெளிப்புற சந்தையை சார்ந்திருப்பதைக் குறைக்கிறது மற்றும் உள்ளீட்டு செலவுகளையும் குறைக்கிறது என்றும் அவர் கூறினார். அத்துடன் நமது எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவை இயற்கை வேளாண்மை வழங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

பயிலரங்கில் பேசிய மத்திய அரசின் வேளாண்துறைச் செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி, மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம், இயற்கை விவசாயத்தை கடைப்பிடித்து வரும் விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார். வேளாண் நடைமுறைகளை அறிவியல் பூர்வமாக வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், ஜார்க்கண்ட், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள், ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றை சேர்ந்த இயற்கை விவசாய ஆர்வலர்கள் 90 பேர் இந்த தேசிய பயிலரங்கில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த இரண்டு நாள் தேசிய பயிலரங்கு இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கத்தில் மேற்கொள்ளப்படும் பயிற்சி நடவடிக்கைகளில் முதலாவதாகும்.