போக்குவரத்து தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைப்பதை இக்கண்காட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது
இக்கண்காட்சியில் ஒரே நேரத்தில் 9 -க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், 20-க்கும் அதிகமான கருத்தரங்குகள் உள்ளிட்டவை இடம்பெறும்
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து வாகனங்கள் தொடர்பான கண்காட்சியான உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சி 2025-ஐ (பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025) பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (17 ஜனவரி 2025) காலை 10:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைக்கிறார்.
இந்தக் கண்காட்சி 2025 ஜனவரி 17 முதல் 22 வரை மூன்று தனித்தனி இடங்களில் நடைபெறும்: புது தில்லியில் உள்ள பாரத் மண்டபம், யஷோபூமி, கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டர் மற்றும் மார்ட் ஆகிய இடங்களில் இது நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் ஒரே நேரத்தில் 9-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், 20-க்கும் அதிகமான கருத்தரங்குகள் இடம்பெறும். மேலும், வாகனத் தொழில்துறையில் பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையிலான முன்முயற்சிகளை எடுத்துரைக்கும் நோக்கில் மாநிலங்களின் அமர்வுகளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும்.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 எனப்படும் உலகளாவிய பாரத போக்குவரத்து கண்காட்சியானது முழு போக்குவரத்து மதிப்புச் சங்கிலியையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு கண்காட்சியில் கண்காட்சியாளர்களும், பார்வையாளர்களும் உலகெங்கிலும் இருந்து பங்கேற்பதன் மூலம் இது உலகளாவிய முக்கியத்துவம் பெறும். இது ஒரு வாகனத் தொழில்துறை தொடர்பான அரசு ஆதரவில் மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். இது பல்வேறு தொழில்துறை அமைப்புகள், நிறுவனங்களின் கூட்டு ஆதரவுடன் இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகிறது.