Sun. Jan 19th, 2025

மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, மகாராஷ்டிரத்தின் பிரபலமான முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது மூத்த சகாக்களே, திரு ராஜ்நாத் சிங் அவர்களே, மகாராஷ்டிர முதலமைச்சர் சஞ்சய் சேத் அவர்களே, துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, அஜித் பவார் அவர்களே, ராணுவ தளபதி அவர்களே, கடற்படை தளபதி அவரகளே, அனைத்து கடற்படை சகாக்களே, மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து சக ஊழியர்களே, விருந்தினர்களே, பெண்கள் மற்றும் தாய்மார்களே.

ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாகவும் கொண்டாடப்படுகிறது. நாட்டைப் பாதுகாப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒவ்வொரு துணிச்சலான ராணுவ வீரருக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். இந்த நாளில் பாரத அன்னையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு துணிச்சலான ஆண்களையும், பெண்களையும் நான் வாழ்த்துகிறேன்.

நண்பர்களே,

இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம், கடற்படையின் புகழ்பெற்ற வரலாறு மற்றும் தற்சார்பு இந்தியா இயக்கம் ஆகியவற்றுக்கு இன்று முக்கியமான ஒரு நாளாகும். சத்ரபதி சிவாஜி மகராஜ் இந்திய கடற்படைக்கு புதிய பலத்தையும், புதிய பார்வையையும் அளித்துள்ளார். அவரது புனித பூமியான இன்று, 21-ம் நூற்றாண்டின் கடற்படையை வலுப்படுத்த நாம் பெரிய அடியை எடுத்து வைக்கிறோம். ஒரு பேரழிவை ஏற்படுத்தும் கப்பல், ஒரு போர்க்கப்பல், ஒரு நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஒன்றாக அர்ப்பணிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த மூன்று முன்னணி கப்பல்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. நான் பாரதக் கடற்படையையும், அவர்களது கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து சக ஊழியர்களையும், பொறியாளர்களையும், தொழிலாளர்களையும், ஒட்டுமொத்த நாட்டையும் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

இன்றைய நிகழ்ச்சி நமது புகழ்பெற்ற பாரம்பரியத்தை எதிர்கால விருப்பங்களுடன் இணைக்கிறது. நீண்ட கடல் பயணங்கள், வர்த்தகம், கடற்படை பாதுகாப்பு, கப்பல் தொழில் ஆகியவற்றில் நமக்கு வளமான வரலாறு உள்ளது. அதன் வரலாற்றிலிருந்து உத்வேகம் பெற்று, இன்றைய இந்தியா உலகின் ஒரு பெரிய கடல்சார் சக்தியாக மாறி வருகிறது. இன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ள கப்பல்களும் இதைத்தான் பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, நமது நீலகிரி கப்பல் சோழ வம்சத்தின் கடல் சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குஜராத் துறைமுகங்கள் மூலம் மேற்கு ஆசியாவுடன் இந்தியா இணைக்கப்பட்டிருந்த காலகட்டத்தை சூரத் போர்க்கப்பல் நமக்கு நினைவூட்டுகிறது. இந்த நாட்களில், இந்த இரண்டு கப்பல்களுடன், வாக்ஷீர் நீர்மூழ்கிக் கப்பலும் இன்று இயக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, பி75 ரக நீர்மூழ்கிக் கப்பலான கல்வாரியை இயக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த வகையின் ஆறாவது நீர்மூழ்கிக் கப்பலான வாக்ஷீரை அர்ப்பணிக்கும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்தது. இந்தப் புதிய கப்பல்கள் இந்தியாவின் பாதுகாப்பு, முன்னேற்றம் ஆகிய இரண்டிற்கும் புதிய பலத்தை அளிக்கும்.

நண்பர்களே,

இன்று, உலகம் முழுவதும், குறிப்பாக தென்பகுதியில் நம்பகமான, பொறுப்பான கூட்டாளியாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவானது வளர்ச்சி உணர்வில் செயல்படுகிறது, விரிவாக்க உணர்வுடன் இல்லாமல், வெளிப்படையான, பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான இந்திய-பசிபிக் பிராந்தியத்தை இந்தியா எப்போதும் ஆதரித்து வந்துள்ளது. எனவே, கடலை ஒட்டியுள்ள நாடுகளின் வளர்ச்சி என்று வரும்போது, சாகர் என்ற தாரகமந்திரத்தை இந்தியா வழங்கியுள்ளது. சாகர் என்றால் இந்த மண்டலத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்று அர்த்தம். சாகர் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் நாங்கள் முன்னேறினோம். ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டபோது, ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற தாரக மந்திரத்தை உலகிற்கு அளித்தோம். கொரோனாவை எதிர்த்துப் போராடும் போது உலகம் சோர்வடைந்து கொண்டிருந்தபோது இந்தியா, ஒரே பூமி ஒரே ஆரோக்கியம் என்ற தொலைநோக்குப் பார்வையை வழங்கியது. உலகம் முழுவதையும் நமது குடும்பமாக கருதுகிறோம். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற கொள்கையில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே, இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பை தனது பொறுப்பாக இந்தியா கருதுகிறது.

நண்பர்களே,

உலகளாவிய பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் இயக்கவியலை வடிவமைப்பதில், இந்தியா போன்ற ஒரு கடல்சார் நாடு பெரும் பங்கு வகிக்கப் போகிறது. பொருளாதார முன்னேற்றம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு, பிராந்திய நீர்நிலைகள் பாதுகாக்கப்படுவதும், கப்பல் போக்குவரத்து சுதந்திரம் உறுதி செய்யப்படுவதும், வர்த்தக வழங்கல் வழிகள் மற்றும் கடல் வழிகள் பாதுகாப்பாக இருப்பதும் முக்கியம். பயங்கரவாதம், ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து இந்த முழு பிராந்தியத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். ஆகையால், கடல்களை பாதுகாப்பாகவும், வளமாகவும் மாற்றுவதில் நாம் உலகளாவிய கூட்டாளிகளாக மாறுவது தற்போது முக்கியம். அரிய கனிமங்கள், மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் தடுக்கும் திறனை வளர்த்து அவற்றை நிர்வகிப்போம். புதிய கப்பல் வழிகள் மற்றும் தகவல்தொடர்பு கடல் பாதைகளைக் கண்டுபிடிப்பதில் நாம் முதலீடு செய்கிறோம். தற்போது இந்தியா இந்த திசையில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. கடந்த சில மாதங்களிலேயே நமது கடற்படை நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தேசிய மற்றும் சர்வதேச சரக்குகளைப் பாதுகாத்துள்ளது. இது இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. உங்கள் அனைவராலும் அது அதிகரித்துள்ளது, அதனால்தான் இன்று உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை மீதான நம்பிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது ஆசியான், ஆஸ்திரேலியா, வளைகுடா அல்லது ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதை நீங்கள் காணலாம். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் நிலையும், அதன் வலிமையும் இந்த உறவுகளை வலுப்படுத்துவதற்கு மிகப் பெரிய அடிப்படையாகும். அதனால்தான் இன்றைய நிகழ்வு ராணுவக் கண்ணோட்டத்திலும், பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் சம அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் ராணுவ திறன் மிகவும் திறமையானதாகவும், நவீனமாகவும் இருக்க வேண்டும் என்பது நாட்டின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். நீர், நிலம், வானம், ஆழ்கடல் அல்லது எல்லையற்ற விண்வெளி என எதுவாக இருந்தாலும், இந்தியா தனது நலன்களை எல்லா இடங்களிலும் பாதுகாத்து வருகிறது. இதற்காக தொடர்ந்து சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்புப் படைகளின் தளபதி பதவி உருவாக்கம் அத்தகைய சீர்திருத்தங்களில் ஒன்றாகும்.

நண்பர்களே,

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் முப்படைகளும் தற்சார்பு என்ற தாரக மந்திரத்தை ஏற்றுக்கொண்ட விதம் மிகவும் பாராட்டத்தக்கது. நெருக்கடி காலங்களில் இந்தியா மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தின் தீவிரத்தை புரிந்துகொண்டு, நீங்கள் அனைவரும் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்கிறீர்கள். தலைமைப் பண்பை வழங்குகிறீர்கள். வெளிநாடுகளிலிருந்து இனி இறக்குமதி செய்யப்பட வேண்டாம் என்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தளவாடங்கள் மற்றும் கருவிகளின் பட்டியலை நமது ராணுவங்கள் தயாரித்துள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களுடன் ஒரு இந்திய ராணுவ வீரர் முன்னேறும்போது, அவரது நம்பிக்கையும் வித்தியாசமாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை கர்நாடகாவில் தொடங்கப்பட்டுள்ளது. ராணுவத்துக்கான போக்குவரத்து விமானங்களை தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. தேஜஸ் போர் விமானம் இந்தியாவின் நற்பெயரை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. உத்தரப்பிரதேசம், தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வழித்தடங்கள் பாதுகாப்பு தளவாட உற்பத்திக்கு மேலும் உத்வேகம் அளிக்கப் போகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்வோம் இயக்கத்தை நமது கடற்படை பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மஸ்கான் கப்பல் கட்டும் தளத்தைச் சேர்ந்த உங்கள் அனைவருக்கும் இதில் மிகப் பெரிய பங்களிப்பு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், 33 கப்பல்கள், 7 நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த 40 கடற்படைக் கப்பல்களில், 39 கப்பல்கள் இந்திய கப்பல் கட்டும் தளங்களில் கட்டப்பட்டவை. இதில் நமது அற்புதமான, பிரம்மாண்டமான ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல், ஐஎன்எஸ் அரிஹந்த், ஐஎன்எஸ் அரிகாட் போன்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களும் அடங்கும். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்திற்கு இத்தகைய ஊக்கத்தை அளித்ததற்காக நாட்டின் முப்படைகளையும் நான் மனதார பாராட்டுகிறேன். தற்போது, இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.25 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். உங்கள் ஆதரவுடன், இந்தியா தனது பாதுகாப்புத் துறையை விரைவாக மாற்றியமைக்கும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

இந்திய ஆயுதப்படைகளின் வலிமையை அதிகரிப்பதோடு, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம் பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளையும் திறந்துள்ளது. உதாரணமாக, கப்பல் கட்டும் அமைப்பு ஒரு எடுத்துக்காட்டு. கப்பல் கட்டுமானத் துறையில் எந்த அளவுக்கு முதலீடு செய்யப்படுகிறதோ, அந்த அளவுக்கு பொருளாதாரத்தில் அது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். அதாவது, கப்பல் கட்டுவதில் நாம் ரூ .1 முதலீடு செய்தால், சுமார் ரூ .1.82 பைசா பொருளாதாரத்தில் புழக்கத்தில் உள்ளது. கற்பனை செய்து பாருங்கள், தற்போது நாட்டில் 60 பெரிய கப்பல்கள் கட்டுமானத்தில் உள்ளன. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி. அதாவது, இவ்வளவு நிதியை முதலீடு செய்வதன் மூலம், சுமார் ரூ .3 லட்சம் கோடி நமது பொருளாதாரத்தில் புழக்கத்தில் இருக்கும். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை 6 மடங்கு அதிகரித்துள்ளது. கப்பல்களின் பெரும்பாலான பொருட்கள், பெரும்பாலான உபகரணங்கள் நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் உருவாக்கப்பட்டவையாகும். எனவே, ஒரு கப்பல் கட்டும் பணியில் 2000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றால், அந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் சுமார் 12 ஆயிரம் வேலைகள் உருவாக்கப்படுகின்றன.

நண்பர்களே,

தற்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. நமது உற்பத்தியும், ஏற்றுமதி திறனும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டுகளில், இந்தியாவுக்கு நூற்றுக்கணக்கான புதிய கப்பல்கள் தேவைப்படும். எனவே, துறைமுகம் சார்ந்த இந்த மாதிரி வளர்ச்சி நமது பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிப்பதுடன், ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

நண்பர்களே,

இந்தத் துறையில் வேலைவாய்ப்பு எவ்வாறு அதிகரித்து வருகிறது என்பதற்கு கப்பல்களின் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையும் ஒரு எடுத்துக்காட்டாகும். 2014-ம் ஆண்டில், இந்தியாவில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்திற்கும் குறைவாக இருந்தது. தற்போது அது இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து கிட்டத்தட்ட 3 லட்சத்தை எட்டியுள்ளது. தற்போது கப்பல்களின் எண்ணிக்கையில் உலகில் முதல் ஐந்து இடங்களில் இந்தியா இடம்பெற்றுள்ளது.

நண்பர்களே,

எங்கள் அரசின் மூன்றாவது பதவிக்காலம் பல பெரிய முடிவுகளுடன் தொடங்கியுள்ளது. நாட்டின் தேவைகளை கருத்தில் கொண்டு புதிய கொள்கைகளை விரைவாக வகுத்து புதிய பணிகளை தொடங்கியுள்ளோம். நாட்டின் ஒவ்வொரு துறையையும், ஒவ்வொரு பகுதியையும் மேம்படுத்தும் இலக்குடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். துறைமுகத் துறையின் விரிவாக்கமும் இதன் ஒரு பகுதியாகும். எங்கள் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் பெரிய முடிவுகளில் ஒன்று மகாராஷ்டிராவில் உள்ள வாதவன் துறைமுகத்திற்கு ஒப்புதல் அளித்தது. 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த நவீன துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இது மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

நண்பர்களே,

மிக நீண்ட காலமாக, எல்லை மற்றும் கடலோரம் தொடர்பான இணைப்பு உள்கட்டமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில், முன்னெப்போதும் இல்லாத வகையில் இதற்காக பணிகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீரில் சோனாமார்க் சுரங்கப்பாதையைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதன் மூலம் கார்கில், லடாக் போன்ற எல்லைப் பகுதிகளை எளிதாக அடைய முடியும். கடந்த ஆண்டு, அருணாச்சல பிரதேசத்தில் சேலா சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. இது எல்லைக்கோட்டு பகுதிக்கு நமது ராணுவம் அணுகுவதை எளிதாக்குகிறது. தற்போது, ஷின்குன் லா சுரங்கப்பாதை, ஜோஜிலா சுரங்கப்பாதை போன்ற பல முக்கியமான உள்கட்டமைப்புகளில் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. பாரத்மாலா திட்டத்தின் மூலம் எல்லைப் பகுதிகளில் சிறந்த தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இன்று எல்லைப்புற கிராமங்களின் வளர்ச்சியில் துடிப்பான கிராம திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், தொலைதூரத்தில் உள்ள தீவுகளிலும் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். யாரும் வசிக்காத அந்தத் தீவுகளின் தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மட்டுமல்ல, இப்போது அந்தத் தீவுக்கென ஒரு புதிய அடையாளமும் உருவாக்கப்பட்டு வருகிறது, அவற்றுக்கு ஒரு புதிய பெயர் சூட்டப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், இந்தியப் பெருங்கடலில் உள்ள கடற்பரப்பில் உள்ள கடற்பகுதிகளுக்கும் பெயர் சூட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, இந்தியாவின் முன்முயற்சியின் பேரில், ஒரு சர்வதேச அமைப்பு இதுபோன்ற 5 இடங்களுக்கு பெயரிட்டது. இந்தியப் பெருங்கடலில் உள்ள அசோக் கடல்மலை, ஹர்ஷவர்தன் கடல்மலை, ராஜ ராஜ சோழன் கடல் மலை, கல்பதரு உச்சி மற்றும் சந்திரகுப்த உச்சி ஆகியவை இந்தியாவின் பெருமையை அதிகரித்து வருகின்றன.

நண்பர்களே,

எதிர்காலத்தில் விண்வெளி மற்றும் ஆழ்கடல் இரண்டும் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனால்தான் தற்போது இந்தியா விண்வெளி மற்றும் ஆழ்கடல் இரண்டிலும் தனது திறன்களை அதிகரித்து வருகிறது. நமது சமுத்ராயன் திட்டம் விஞ்ஞானிகளை கடலில் 6 ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறது.‌ இதனை ஒரு சில நாடுகள் மட்டுமே அடைய முடிந்துள்ளது. அதாவது, எதிர்கால சாத்தியக்கூறுகள் குறித்து செயல்படுவதில் நமது அரசு எந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டில் இந்தியா முழு நம்பிக்கையுடன் முன்னேற, நாம் அடிமைத்தனத்தின் சூழலிலிருந்து விடுபடுவது மிகவும் முக்கியம். நமது கடற்படை இதிலும் தலைமைப் பண்பை வெளிப்படுத்தியுள்ளது. கடற்படை தனது கொடியை சத்ரபதி சிவாஜி மகாராஜின் புகழ்பெற்ற பாரம்பரியத்துடன் இணைத்துள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜின் பாரம்பரியத்திற்கு ஏற்ப கடற்படை அட்மிரல் தரவரிசையின் தோள்பட்டைகளை மறுவடிவமைப்பு செய்துள்ளது. இந்தியாவில் தயாரியுங்கள் இயக்கமும், இந்தியாவின் சுயசார்பு இயக்கமும் அடிமைத்தன மனநிலையிலிருந்து விடுதலையை ஊக்குவிக்கிறது. நீங்கள் அனைவரும் இதுபோன்ற பெருமிதமான தருணங்களை நாட்டிற்கு தொடர்ந்து வழங்குவீர்கள் என்று நான் நம்புகிறேன், இந்தியாவை வளர்ச்சியடையச் செய்ய பங்களிக்கும் ஒவ்வொரு பணியையும் நாம் ஒன்றிணைந்து செய்ய வேண்டும். நமது பொறுப்புகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், வளர்ச்சியடைந்த இந்தியா என்பதே ஒவ்வொருவரின் இலக்காகும். இன்று நாட்டுக்கு கிடைத்துள்ள இந்த புதிய போர் கப்பல்கள் நமது வலிமையை மேம்படுத்தும்.

நண்பர்களே,

இது ஒரு நல்ல சந்தர்ப்பம். ஒட்டுமொத்த நாடும் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது, ஒட்டுமொத்த நாடும் பெருமிதம் கொள்கிறது. எனவே, ஒரு புதிய நம்பிக்கை, புதிய உற்சாகம், புதிய உறுதிப்பாடு ஆகியவற்றுடன், நாம் முழு பலத்துடன் இணைந்து வளர்ச்சியடைந்த இந்தியாவின் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த தருணத்தில், இந்த முக்கியமான மூன்று முக்கிய திட்டங்களுக்காக உங்கள் அனைவரையும் வாழ்த்தி எனது உரையை நிறைவு செய்கிறேன். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

என்னுடன் இணைந்து உரக்க கூறுங்கள்….

பாரத அன்னை வாழ்க!

பாரத அன்னை வாழ்க!!

பாரத அன்னை வாழ்க!!!


ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் போர் கப்பல்களை அர்ப்பணித்த போது பிரதமர் ஆற்றிய உரை

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta