மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், வெள்ளிக்கிழமை புது தில்லியில் நடைபெற்ற பாரத் பருவநிலை மன்றத்தில் சூரிய சக்தி, காற்று, ஹைட்ரஜன் மற்றும் பேட்டரி சேமிப்புத் துறைகளில் இந்தியாவின் தூய்மையான தொழில்நுட்ப மதிப்புச் சங்கிலிகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பாரத் கிளீன்டெக் உற்பத்தி தளத்தை தொடங்கிவைத்தார்.
உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகள் (பிஎல்ஐக்கள்) மற்றும் மானியங்கள் சுத்தமான எரிசக்தி துறையின் நீண்டகால வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாக திரு கோயல் எடுத்துரைத்தார். பிஎல்ஐ திட்டம் இத்துறையை ஊக்குவிக்க மட்டுமே உதவும், ஆனால் தூய்மையான எரிசக்தி துறை தன்னிறைவு பெற பாடுபட வேண்டும் என்றார். கிளீன்டெக் துறையானது அரசிலிருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும், என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் புதுமையாக சிந்திக்கவும், நாட்டில் உற்பத்தி அளவை அதிகரிக்கவும் திரு கோயல் வலியுறுத்தினார். பாரத் க்ளீன்டெக் உற்பத்தித் தளத்தின் துவக்கம், இந்திய நிறுவனங்களுக்கு ஒத்துழைக்க, இணை கண்டுபிடிப்புகளுக்கு வாய்ப்பளிக்கும் என்றும், நிதியுதவி, யோசனைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு தளத்தை வழங்க உதவும் என்று அவர் கூறினார். 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 500 ஜிகாவாட் சுத்தமான எரிசக்தி ஆதாரங்களை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி நிர்ணயித்த இலக்கை இந்த மன்றத்தில் பங்கேற்பவர்கள் அடைய முடியும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். பருவநிலை மாற்றத்தின் சவால்களை மதிப்பது இந்தியாவுக்கு புதிதல்ல, சூரிய சக்தியை பயன்படுத்திய முதல் மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று என்று அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் சூரிய ஒளி மின்சாரம் கிடைப்பதற்குக் காரணம், பிரதமரின் வெளிப்படைத் தன்மை, நேர்மையான ஏலங்களை நடத்துதல், சமமான போட்டியை வழங்குதல், அமலாக்கத்தின் அளவை கணிசமாக அதிகரித்தது ஆகியவையே காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.