Wed. Jan 8th, 2025

மத்திய சுகாதார செயலாளர் திருமிகு புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா,நேற்று (ஜனவரி 06, 2025) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் மெய்நிகர் முறையில் ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தியாவில் சுவாச நோய்களின் தற்போதைய நிலைமை குறித்தும் சீனாவில் ஹெச்.எம்.பி.வி பாதிப்புகள் அதிகரிப்பதாக வெளிவரும் ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து அத்தகைய பாதிப்புகள் தொடர்பான நம் நாட்டின் நிலை மற்றும் அவற்றின் நிர்வாகத்திற்கான பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தின் போது ஆய்வு செய்யப்பட்டது. சுகாதார ஆராய்ச்சித் துறை செயலாளர் டாக்டர் ராஜீவ் பால், சுகாதார சேவைகள் இயக்குநரகத்தைச் சேர்ந்த டாக்டர் (பேராசிரியர்) அதுல் கோயல், மாநிலங்களின் சுகாதார செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள், தேசிய நோய் கட்டுப்பாடு மையம், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம், என்.ஐ.வி மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் (ஐ.டி.எஸ்.பி)மாநில கண்காணிப்பு பிரிவுகளின் நிபுணர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின்போது, ஐ.டி.எஸ்.பி-இன் தரவுகளின்படி, இன்ஃப்ளூயன்ஸாவைப் போன்ற நோய்கள் (ஐ.எல்.ஐ) மற்றும் கடுமையான குறுகிய கால சுவாச மண்டல நோய்கள் (எஸ்.ஏ.ஆர்.ஐ) பாதிப்புகளில் வழக்கத்திற்கு மாறான அதிகரிப்பு நாட்டில் எங்கும் கண்டறியப்படவில்லை என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஐ.சி.எம்.ஆர் சென்டினல் கண்காணிப்புத் தரவுகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன.

2001-ஆம் ஆண்டு முதல் உலக அளவில் ஹெச்.எம்.பி.வி பரவி வருவதால், பொது மக்களுக்கு இதனால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று மத்திய சுகாதார செயலாளர் வலியுறுத்தினார். ஐ.எல்.ஐ/எஸ்.ஏ.ஆர்.ஐ கண்காணிப்பை பலப்படுத்தவும், மறுபரிசீலனை செய்யவும் மாநிலங்களுக்கு அவர் அறிவுறுத்தினார். குளிர்கால மாதங்களில் சுவாச நோய்களின் அதிகரிப்பு பொதுவாகக் காணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். சுவாசக் கோளாறுகள் பிரச்சனையை எதிர்கொள்ள நாடு நன்கு தயாராக உள்ளது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மனித மெட்டா நிமோ வைரஸ் (ஹெச்.எம்.பி.வி) என்பது பல சுவாச வைரஸ்களில் ஒன்றாகும், இது குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில் அனைத்து வயதினருக்கும் தொற்றுகளை ஏற்படுத்தலாம். வைரஸ் தொற்று பொதுவாக ஒரு லேசான மற்றும் சுய-கட்டுப்படுத்தப்பட்ட நிலை மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தானாகவே குணமாகும். ஐ.சி.எம்.ஆர் – வி.ஆர்.டி.எல் ஆய்வகங்களில் போதுமான நோய் கண்டறிதல் வசதிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

சோப்பு மற்றும் தண்ணீருடன் அடிக்கடி கைகளைக் கழுவுதல் போன்ற எளிய நடவடிக்கைகளுடன் வைரஸ் பரவுவதைத் தடுப்பது குறித்து மக்களிடையே தகவல்களைக் கொண்டு சேர்த்தல், கற்பித்தல், தொடர்புகளை ஏற்படுத்துதல் போன்ற செயற்பாடுகளுடன் விழிப்புணர்வை மேம்படுத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கைகளைக் கழுவாமல் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்த்தல்; நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்தும் நபர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்தல்; இருமல் மற்றும் தும்மலின்போது வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளுதல் முதலிய செயல்பாடுகள் இதில் அடங்கும்.


நாட்டில் சுவாச நோய்களின் தற்போதைய நிலைமை மற்றும் அந்நோய்களை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார நடவடிக்கைகளின் நிலை குறித்து மத்திய சுகாதார செயலாளர் ஆய்வு

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta