Sat. Jan 4th, 2025

திரு என். சந்திரசேகரன், டாக்டர் பழனிவேல் தியாகராஜன், டாக்டர் வீரமுத்துவேல், டி.வி.நரேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்

விழாவின் போது ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையம் தொடங்கி வைக்கப்படும்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டம் 2025, ஜனவரி 4, 2025 அன்று சென்னையில் நடைபெறும் என்று தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் திருமதி ஜி.அகிலா அறிவித்தார். தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் (பிராந்திய பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம்) முன்முயற்சியின் காரணமாக இந்த முக்கிய நிகழ்வு நடத்தப்பட உள்ளது. திருச்சியின் பிராந்திய பொறியியல் கல்லூரி/ தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வளமான மாண்பைக் கொண்டாடுவதற்காக, உலகெங்கிலும் உள்ள திருச்சி தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் மாணவர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைக்கும். முந்தைய உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்றது.

930 க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் 1300க்கும் அதிகமான நிறுவனர்களை உள்ளடக்கிய சுமார் 48,000 முன்னாள் மாணவர்களின் துடிப்பான இணைப்பை பறைசாற்றும் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம், திறமை மற்றும் புத்தாக்கத்தின் ஆற்றல் சக்தியாக விளங்குகிறது. உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் சிறப்பு விருந்தினராக டாட்டா குழுமத்தின் தலைவர் திரு என். சந்திரசேகரன், கௌரவ விருந்தினராக மாநில அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொள்வார்கள். அவர்களுடன் சந்திரயான் 3 திட்ட இயக்குநர் டாக்டர் வீரமுத்துவேல், கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் தலைமை வர்த்தக உத்தியாளர் திரு கோபி கல்லயில் ஆகியோர் உட்பட ஏராளமான முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களது சாதனைகளைப் பகிர்ந்து, ஒருங்கிணைப்புகளை ஊக்குவிப்பதுடன், தாக்கத்தை ஏற்படுத்தும் இணைப்புகளுக்கும் வித்திடுவார்கள்.

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தின் துவக்கம்

2025 உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டத்தின் போது 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையம் திறந்து வைக்கப்படும். தொழில்முனைவு மற்றும் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கான லட்சிய நோக்கத்தின் குறிப்பிடத்தக்க முயற்சியாக இந்தத் துவக்கம் அமைந்துள்ளது. வேளாண் தொழில்நுட்பம், நிதிநுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், பசுமை தொழில்நுட்பம், குவாண்டம் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு/ இயந்திர கற்றல் உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் இந்த மையம் கவனம் செலுத்தும். இரண்டாம் நிலை நகரங்களில் புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்காக இந்த மையத்தில் 150 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.

மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் முன்முயற்சிகளுக்கு அதிகாரம் அளித்தல்

மாணவர் தத்தெடுப்பு திட்டம், பயண மானியங்கள் மற்றும் நிதி உதவி உள்ளிட்ட தொழில்நுட்பக் கழகத்தின் தற்போதைய முன்முயற்சிகள், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கின்றன. முன்னாள் மாணவர்களால் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்கள், தொழில்முனைவோரின் திறமையை ஊக்குவிக்கும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் அர்ப்பணிப்பிற்குச் சான்றாக விளங்குகின்றன. தலைமை பேராசிரியர்கள் பதவிகளை அறிமுகப்படுத்துவது, உலகளாவிய ஆராய்ச்சி ஒருங்கிணைப்புகளை மேம்படுத்துவது போன்ற திட்டங்கள் சிறப்பான கல்வி மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய திருச்சி தொழில்நுட்பக் கழகத்தின் உறுதிபாட்டை வெளிப்படுத்துகின்றன.

“மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்களின் வழிகாட்டுதல், தொழில்துறையால் முன்னெடுத்துச் செல்லப்படும் திட்டங்கள் மற்றும் வளமான புத்தொழில் சூழலியல் முதலியவற்றிற்கான முறைசார் தளமாக ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையம் செயல்படும். ஆராய்ச்சிளை பெருக்கி, தொழில்முனைவு திறமையை வளர்ப்பதற்கு இது ஒரு முக்கிய முயற்சி”, என்று திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் ஜி. அகிலா கூறினார்.

“எங்களது பரந்த மற்றும் சாதனைகளுக்குப் பெயர் பெற்ற முன்னாள் மாணவர்கள் இணைப்பு, வழிகாட்டுதல், நிதி உதவி அளித்தல் மற்றும் புத்தாக்கத்தின் களஞ்சியமாகத் திகழ்கிறது. கல்வி பயின்ற நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் எங்களது கூட்டு உறுதிப்பாட்டை உலகளாவிய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 2025 அடிக்கோடிட்டு காட்டுகிறது”, என்று பிராந்திய பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு கே. மகாலிங்கம் தெரிவித்தார்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தைப் பற்றிய குறிப்பு:

பிராந்திய பொறியியல் கல்லூரி என்று முன்னர் அழைக்கப்பட்ட திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம், முக்கிய கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகத் தொடர்ந்து நீடிக்கும் இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகும். 17 துறைகளில், இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் படிப்புக்கான திட்டங்களை வழங்கும் இந்த நிறுவனம், உலகளாவிய புத்தாக்கம் மற்றும் தொழில்துறை தலைமையில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.


திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டம் 2025, ஜனவரி 4-ஆம் தேதி நடைபெறும்
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta