பிரதமர் திரு நரேந்திர மோடி, மனதின் குரல் 117- வது அத்தியாயத்தில், ஆயுர்வேதத்தின் உலகளாவிய பிரபலத்தை எடுத்துரைத்தார். ஆயுர்வேதம் தொடர்பாக பராகுவேயில் மேற்கொள்ளப்பட்டு வரும் எழுச்சியூட்டும் பணிகளை அவர் மேற்கோள் காட்டினார்.
பிரதமர் கூறுகையில், “தென் அமெரிக்காவில் பராகுவே என்று ஒரு நாடு இருக்கிறது. அங்கு வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்காது. பராகுவேயில் ஒரு அற்புதமான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பராகுவேயில் உள்ள இந்திய தூதரகத்தில், எரிகா ஹூபர் ஆயுர்வேத ஆலோசனைகளை வழங்குகிறார். ஆயுர்வேத அடிப்படையிலான ஆலோசனைகளைப் பெற ஏராளமான உள்ளூர் மக்கள் அவரை அணுகுகிறார்கள்.” என்றார்.
இந்த அங்கீகாரம், ஆயுர்வேதத்தை ஆரோக்கியத்தின் உலகளாவிய மருத்துவ முறையாக ஊக்குவிப்பதில் ஆயுஷ் அமைச்சகத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் கூறுகையில், “ஆயுர்வேதத்தை உலக அளவில் ஊக்குவிப்பதில் தொலைநோக்கு தலைமைத்துவத்திற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகக் கூறினார். ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேதத்தை உலகளாவிய சுகாதார தீர்வாக முன்னேற்றுவதற்கும் அதன் உலகளாவிய சகிச்சைப் பயன்பாட்டை வலுப்படுத்துவதற்கும் உறுதியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
உலக அளவில் ஆயுர்வேதத்தை கணிசமாக விரிவுபடுத்த ஆயுஷ் அமைச்சகம் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.