78-வது சுதந்திர தினத்தையொட்டி இன்று செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவது பற்றியும், இந்தியாவின் வளர்ச்சியைக் கட்டமைப்பதற்கான எதிர்கால இலக்குகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

குறைக்கடத்தி உற்பத்தியில் உலகளாவிய தலைவராக வருவதற்கு இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதமர் எடுத்துரைத்த போது, நமது பயன்பாட்டுக்கு செல்பேசிகளை இறக்குமதி செய்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், தற்போது நமது நாட்டிலேயே உற்பத்தி சூழலை நாம் உருவாக்கியிருக்கிறோம் என்றார். மேலும் இந்தியா மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாறிவருகிறது என்றும் கூறினார். தற்போது செல்பேசிகளை நாம் ஏற்றுமதி செய்யத் தொடங்கியிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
குறைக்கடத்திகள், நவீன தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியவை நமது எதிர்கால இணைப்பிற்கு இன்றியமையாதவை என்று கூறிய பிரதமர், இந்திய குறைக்கடத்தி இயக்கத்திற்கான பணியை நாம் தொடங்கியிருக்கிறோம் என்றார். ஒவ்வொரு சாதனமும், இந்தியாவில் உற்பத்தி செய்த சிப்-ஐ ஏன் கொண்டிருக்க இயலாது என்று திரு மோடி வினவினார். இந்தக் கனவை நிறைவேற்றும் திறனை நமது நாடு கொண்டிருக்கிறது என்று கூறிய அவர், குறைக்கடத்தி உற்பத்தி தொடர்பான பணிகள், இந்தியாவில் நடைபெறும் என்றார். அதற்கான தீர்வுகளை உலகுக்கு வழங்கும் திறமையையும், வழிவகைகளையும் இந்தியா கொண்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.