புதுதில்லியில் உள்ள பூசா வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2024 ஆகஸ்ட் 11 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, வயல்கள் மற்றும் தோட்டங்களில் பயிரிடும் 109 வகை பயிர் ரகங்களை வெளியிட்டார். இந்த 109 ரகங்களில் 61 பயிர்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 34 வயல்களில் சாகுபடி செய்யக்கூடியவை. 27, தோட்டங்களில் பயிர் செய்யக்கூடியவை.
வயல்களில் சாகுபடி செய்யும் 69 பயிர்களில் நெல், கோதுமை, பார்லி, சோளம், முத்துச் சோளம் உட்பட 23 தானியங்களும், கொண்டைக்கடலை, பட்டாணி, துவரை உட்பட 11 பருப்பு வகைகளும், சூரிய காந்தி, நிலக்கடலை, சோயா பீன், எள் உட்பட 7 எண்ணெய் வித்து வகைகளும், 4 கரும்பு வகைகளும், பருத்தி, சணல் ஆகிய 6 நார்ப்பயிர் வகைகளும், 7 வகை தீவனப் பயிர்களும், குறைந்த பயன்பாடுள்ள 11 பயிர்களும் அடங்கும்.
தோட்டங்களில் சாகுபடி செய்யும் 40 பயிர்களில் மாம்பழம், மாதுளை, கொய்யா உட்பட 8 பழ வகைகளும், தக்காளி, சுரைக்காய், தர்பூசணி உட்பட 8 காய்கறி வகைகளும், 3 உருளைக்கிழங்கு வகைகளும், ஏலக்காய், மாங்காய் இஞ்சி உட்பட 6 வாசனை திரவிய வகைகளும், முந்திரி, கோகோ, தேங்காய் என 6 தோட்டப்பயிர் வகைகளும், மேரிகோல்டு, சம்பங்கி உட்பட 5 மலர் வகைகளும், அஸ்வகந்தா, வெல்வெட் பீன்ஸ் உட்பட 4 மருந்து செடி வகைகளும் அடங்கும்.
தமிழ்நாட்டிற்கு உகந்ததாக சிஎஸ்ஆர்-101, கேகேஎல் (ஆர்) ஆகிய நெல் ரகங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிஎஸ்ஆர்-101 ரகம் ஹெக்டேருக்கு 35.15 குவிண்டால் விளைச்சல் தரக்கூடியது. கேகேஎல்(ஆர்) ரகம், ஹெக்டேருக்கு 56 குவிண்டால் விளைச்சல் தரக்கூடியது.
இதேபோல் 4 சோள வகைகளும், சிபிஆர்எம்வி-1 என்ற சிறுதானிய வகையும் தமிழ்நாட்டுக்கு உகந்தவையாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. தன்ஜீலா என்ற எள் ரகமும், ஜேபிஎம் 18-7 என்ற கால்நடை தீவன ரகமும், தமிழ்நாட்டுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அர்காகிரன் என்ற கொய்யா ரகம், கேரளா ஸ்ரீ என்ற வாசனை திரவிய ரகம், விட்டல் கோகோ என்ற தோட்டப்பயிர் ரகம், கல்ப சதாப்தி என்ற தென்னை ரகம், அர்காவைபவ் என்ற சம்பங்கி பூ ரகம் ஆகியவையும் தமிழ்நாட்டுக்கு உகந்தவையாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2044754