நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில், “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நம் அனைவரையும் வருத்தமடையச் செய்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் நடந்ததிலிருந்து, நான் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்து வளங்களையும் திரட்டியுள்ளது. இன்று, நான் அங்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தேன். நான் ஒரு வான்வழி ஆய்வையும் மேற்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களையும் பிரதமர் சந்தித்து பேசியது குறித்து, ‘’நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை நானே நேரில் சந்தித்தேன். இது பல குடும்பங்களில் ஏற்படுத்திய தாக்கத்தை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். நிவாரண முகாம்களுக்குச் சென்று காயமடைந்தவர்களுடன் பேசினேன்” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வசம் உள்ள நிவாரண அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்த அவர், “ஒவ்வொருவருக்கும், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, சாத்தியமான அனைத்து உதவியும் தொடர்ந்து வழங்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்தச் சவாலான நேரத்தில் நாங்கள் அனைவரும் கேரள மக்களுடன் நிற்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
நிலைமையை விமானம் மூலம் ஆய்வு செய்த திரு மோடி, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்தார். தனது சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “சவாலான காலங்களில் அவர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்க நான் அதிகாரிகளையும் முன்வரிசையில் பணிபுரிபவர்களையும் சந்தித்தேன். கேரள அரசிடமிருந்து விரிவான தகவல்கள் கிடைத்தவுடன், பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் பள்ளிகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்’’என்று தெரிவித்துள்ளார்.