கப்பல் கட்டுதலில் உள்நாட்டு தரத்தை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு கடல் தர எஃகு தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடலோரக் காவல்படையும், ஜிண்டால் எஃகு மற்றும் மின் நிறுவனமும் (ஜேஎஸ்பி) 2024 மே 07 அன்று கையெழுத்திட்டன. இந்தக் கூட்டாண்மை மூலம், இரு தரப்பும் உள்நாட்டுமயமாக்கலை வளர்ப்பதற்கும், நாட்டின் நலனுக்காக இந்த பொருட்களை உற்பத்தி செய்து பயன்படுத்துவதற்குமான திறன்களை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சிக்கலான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் பொது-தனியார் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை குறிப்பிடுவதுடன், அரசு முகமைகளுக்கும் தனியார் துறைக்கும் இடையே ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது. மேலும் இந்திய கடலோரக் காவல் படைக்கு கடல்-தர எஃகு பொருட்களை உரிய நேரத்தில் வழங்குவதற்கான உத்தரவாதத்தை கப்பல் கட்டும் தளங்களுக்கு இந்த ஒப்பந்தம் அளிக்கிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடலோரக் காவல்படையின் துணை தலைமை இயக்குநர் (உபகரணம் மற்றும் பராமரிப்பு), திரு எச்கே சர்மா, ஜேஎஸ்பி நிறுவனத்தின் சந்தைப்பிரிவு தலைமை அதிகாரி திரு எஸ்கே பிரதான் ஆகியோர் இந்திய கடலோரக் காவல்படையின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.