ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் இளையோர் சங்கத்தின் நான்காம் கட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பதிவு செய்வதற்கான இணையதளத்தை கல்வி அமைச்சகம் இன்று தொடங்கியது.
நாட்டின் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையேயான தொடர்பை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசின் முன்முயற்சியே இளையோர் சங்கமாகும். 18-30 வயதுக்குட்பட்ட ஆர்வமுள்ள இளைஞர்கள், மாணவர்கள், தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணி தன்னார்வலர்கள், பணிபுரிபவர்கள் / சுயதொழில் செய்வோர் போன்றவர்கள் 2023-ல் தொடங்கப்பட்ட இந்த தனித்துவமான முயற்சியின் வரவிருக்கும் கட்டத்தில் பங்கேற்க இளையோர் சங்க இணையதளத்தில் 2024 பிப்ரவரி 04 வரை பதிவு செய்யலாம். இது குறித்த தகவல்களை https://ebsb.aicte-india.org/ என்ற இணையதளத்தில் காணலாம்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு 2015 அக்டோபர் 31 அன்று நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களுக்கு இடையே நீடித்த, கட்டமைக்கப்பட்ட, கலாச்சார இணைப்பு குறித்த யோசனையை பிரதமர் திரு. நரேந்திர மோடி முன்வைத்தார்.
இந்த யோசனையை முன்னெடுத்துச் செல்ல, ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கம் 2016, அக்டோபர் 31 அன்று தொடங்கப்பட்டது.இதில் பங்கேற்பாளர்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள், இயற்கை நிலத்தோற்றங்கள், வளர்ச்சி அடையாளங்கள், சமீபத்திய சாதனைகள் குறித்த அனுபவத்தைப் பெறுகிறார்கள். இளையோர் சங்கத்தின் நான்காம் கட்டத்திற்காக நாடு முழுவதும் இருபத்தி இரண்டு புகழ்பெற்ற நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இளையோர் சங்கத்தின் பல்வேறு கட்டங்களில் 69 சுற்றுலாக்களில் 2870-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.