காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு தலங்களிலும் மக்கள் குடும்பத்துடன் திரண்டு பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
source: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D