தொலைத் தொடர்புத் துறையின் கீழ் செயல்படும் டிஜிட்டல் இந்தியா நிதியம் நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளிப்பதற்காக வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பாரத்நெட் திட்டத்தின் கீழ் அதிவேக அகண்ட அலைவரிசை இணைப்பு மூலம் டிஜிட்டல் சேவைகள், டிஜிட்டல் நிர்வாகம், டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம், நபார்டு வங்கியால் நிதியுதவி வழங்கப்படும் நிறுவனங்களில் கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
தொலைத் தொடர்புத் துறை செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல், டிபிஎன் நிர்வாகி திரு நீரஜ் வர்மா, டிபிஎன் திட்ட இயக்குநர் திரு. சஞ்சீவன் சின்ஹா, பிஎஸ்என்எல் தலைவர் இயக்குநர் திரு ராபர்ட் ரவி, நபார்டு வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. ஷாஜி கே.வி. மற்றும் நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் திரு சஞ்சய் குமார் குப்தா ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நாட்டில் உள்ள பஞ்சாயத்துகள் மற்றும் கிராமங்களில் அதிவேக அகண்ட அலைவரிசை மற்றும் மொபைல் இணைப்புகளை இயக்குவதில் டிஜிட்டல் இந்தியா நிதியம் முக்கிய பங்கு வகிக்கிறது. பாரத்நெட் திட்டத்தின் கீழ் அதிவேக அகண்ட அலைவரிசை இணைப்பு மூலம் இந்த ஒத்துழைப்பு, நபார்டு வங்கியின் ஆதரவு மற்றும் கணினிமயமாக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் போன்ற நிறுவனங்களுக்கு டிஜிட்டல் உத்வேகத்தை அளிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2115831