சர்வதேச பௌத்த கூட்டமைப்பு (ஐபிசி) மற்றும் விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளை (விஐஎஃப்) ஆகியவை “மோதல் தவிர்ப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கவனத்துடன் தொடர்பு” என்ற கருப்பொருளில் 2 வது சர்வதேச பௌத்த ஊடக மாநாட்டை ஏற்பாடு செய்ய உள்ளன. இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் திரு பாய்சுங் பூட்டியா கௌரவ விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்தத் தனித்துவமான மாநாடு 11 செப்டம்பர் 2024 அன்று புது தில்லியில் உள்ள விஐஎஃப்-ல் நடைபெறும். விஐஎஃப் தலைவர் திரு குருமூர்த்தி நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றுவார். இந்த மாநாட்டில் 18 நாடுகளைச் சேர்ந்த ஊடகப் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
2 வது சர்வதேச பௌத்த ஊடக மாநாட்டின் முதன்மை நோக்கம், உலகளாவிய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கும் ஊடக நிறுவனங்களில் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் நவீன ஊடக நடைமுறைகளில் பௌத்த போதனைகளை எவ்வாறு உள்வாங்க முடியும் என்பதில் கவனம் செலுத்தும். இந்த மாநாடு நெறிமுறை இதழியலை வளர்ப்பது, கவனத்துடன் கூடிய தகவல்தொடர்புகளை ஊக்குவித்தல் மற்றும் ஆசியா முழுவதும் பௌத்த ஊடக நிபுணர்களின் வலையமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதலாவது மாநாடு 12 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பௌத்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பிரமுகர்கள் உட்பட சுமார் 150 பிரதிநிதிகளை ஒன்றிணைத்தது. மேலும் பௌத்த கொள்கைகளை ஊடக நடைமுறைகளில் ஒருங்கிணைப்பதற்கான வலுவான அடித்தளத்தையும் அது அமைத்தது.