வேளாண் ஆராய்ச்சியில் மாற்றம் – தனியார் துறையின் பங்களிப்பை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் கிரிஷி பவனில் பங்குதாரர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு பகீரத் சவுத்ரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை செயலாளரும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநருமான டாக்டர் ஹிமான்ஷு பதக் ஆகியோர் கலந்து கொண்டனர். ஐ.சி.ஏ.ஆர் நிறுவனங்கள், மத்திய மற்றும் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், தனியார் துறை நிறுவனங்கள், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள், மாநில வேளாண் துறைகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், முற்போக்கு விவசாயிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்து 1,000 க்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் பங்கேற்ற இந்த அமர்வு நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் நடத்தப்பட்டது.
தற்போதைய இந்திய வேளாண் நிலப்பரப்பின் மிகப்பெரிய ஆற்றலையும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டும் வாய்ப்புகளை நோக்கி கவனம் செலுத்துவதையும் திரு பகீரத் சவுத்ரி எடுத்துரைத்தார்.