யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2022 தொடர்பாக தவறான விளம்பரம் செய்ததற்காக சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு எதிராக தலைமை ஆணையர் திருமதி நிதி கரே, ஆணையர் திரு அனுபம் மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
தவறான விளம்பரம் செய்ததற்காக சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு சிசிபிஏ ரூ .5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் விதிகளை மீறும் எந்தவொரு பொருள் அல்லது சேவைக்கும் தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சங்கர் ஐஏஎஸ் அகாடமி தனது விளம்பரத்தில் யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2022 தொடர்பாக பின்வரும் தகவல்களை முன்வைத்தது-
“அகில இந்திய அளவில் 933 பேரில் 336 பேர் தேர்வு”
“முதல் 100 இடங்களில் 40 பேர்”
“தமிழகத்தில் 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், அவர்களில் 37 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்தவர்கள்.”
“இந்தியாவின் சிறந்த ஐஏஎஸ் அகாடமி”
சங்கர் ஐஏஎஸ் அகாடமி பல்வேறு வகையான படிப்புகளை விளம்பரப்படுத்தியது. ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு முடிவுகளில் விளம்பரப்படுத்தப்பட்ட வெற்றிகரமான தேர்வர்கள் தேர்ந்தெடுத்த பாடநெறி தொடர்பான தகவல்கள் வேண்டுமென்றே விளம்பரத்தில் மறைக்கப்பட்டதை சி.சி.பி.ஏ கண்டறிந்தது. இது நிறுவனத்தால் உரிமை கோரப்பட்ட வெற்றிகரமான தேர்வர்கள் அனைவரும் நிறுவனம் தனது இணையதளத்தில் விளம்பரப்படுத்திய கட்டண படிப்புகளைத் தேர்ந்தெடுத்ததாக நுகர்வோர் தவறாக நம்பும் விளைவை ஏற்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த நடைமுறையின் விளைவாகப் பயிற்சி நிறுவனங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட கட்டணப் படிப்புகளில் சேர்வதற்கு நுகர்வோரை ஈர்க்கிறது.
சங்கர் ஐஏஎஸ் அகாடமி தனது பதிலில், யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2022-ல் 336 தேர்வர்களுக்கு மாறாக 333 தேர்வர்களின் விவரங்களை மட்டுமே சமர்ப்பித்தது. உரிமைகோரப்பட்ட 336 மாணவர்களில், 221 பேர் கட்டணமில்லா நேர்காணல் வழிகாட்டல் திட்டத்தை எடுத்தனர், 71 பேர் முதன்மைத் தேர்வு தொடரை எடுத்தனர், 35 பேர் தொடக்கத் தேர்வு தொடரை எடுத்தனர், 12 பேர் பொதுப்பாடங்களில் தொடக்க மற்றும் முதன்மைத் தேர்வை எடுத்தனர், 4 பேர் தொடக்கத் தேர்வு தொடரை வேறு சில முதன்மைப் பாடத் திட்டங்களுடன் (விருப்ப மற்றும்/அல்லது ஜிஎஸ்) எடுத்தனர். இந்த உண்மை அவர்களின் விளம்பரத்தில் வெளிப்படுத்தப்படவில்லை. இதனால் நுகர்வோரை ஏமாற்றியுள்ளனர். இந்த முக்கியமான உண்மையை மறைப்பதன் மூலம், தேர்வர்களின் வெற்றியில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் பங்கு தெளிவாக தெரியப்படுத்தாமல், தவறான மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு, நியாயமற்ற வர்த்தக நடைமுறையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தகவல் பெறுவதற்கான நுகர்வோரின் உரிமையை இந்த விளம்பரம் மீறியுள்ளது.
சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இருந்து தொடக்கப் பாடத்தைத் தெரிவு செய்த 18 நேர்வுகளில், ரசீதில் பாடத்தின் தொடக்க தேதி 09.10.2022 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2022-ன் தொடக்கத் தேர்வு 05.06.2022 அன்று நடத்தப்பட்டு முடிவு 22.06.2022 அன்று அறிவிக்கப்பட்டது, அதாவது இந்த தேர்வர்கள் அடுத்த யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2023 தொடக்கத் தேர்வுக்கான பாடத்தைத் தெரிவு செய்துள்ளனர் என்று அர்த்தம். சங்கர் ஐஏஎஸ் அகாடமி இந்த தேர்வர்களை யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வு 2022-ன் மொத்த தேர்வுப் பட்டியலில் உரிமைகோரியுள்ளது.
சிசிபிஏ தலைமை ஆணையர் திருமதி நிதி கரே கூறுகையில், செய்தி அறிக்கைகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் யுபிஎஸ்சி குடிமைப்பணிகள் தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கின்றனர். சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் விளம்பரம் யுபிஎஸ்சி ஆர்வலர்களை இலக்காகக் கொண்டது. அதனால்தான் இத்தகைய விளம்பரங்கள் உண்மையான, நேர்மையான பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2050561