குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூன் 20, 2024) புதுதில்லியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனத்திற்கு வருகை தந்தார், அங்கு அவர் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மாணவர்களுடன் நேரத்தைச் செலவிட்டார். அவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த குடியரசுத் தலைவர், புதுப்பிக்கப்பட்ட செயற்கை உறுப்பு உபகரண மையத்தையும் பார்வையிட்டு நோயாளிகளுடன் உரையாடினார்.
மையத்தில் கூடியிருந்தோரிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், ஒரு நாட்டின் அல்லது சமுதாயத்தின் முன்னேற்றத்தை அந்த நாட்டு மக்கள் அல்லது சமுதாயம் மாற்றுத்திறனாளிகள் மீது காட்டும் உணர்வு பூர்வ பரிவின் மூலமாக அளவிட முடியும் என்று கூறினார். உணர்திறன் மற்றும் உள்ளடக்கம் ஆகியவை நமது கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று அவர் கூறினார்.
மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை உணர்ந்து, அனைவரையும் உள்ளடக்கிய வகையில் நமது முயற்சிகள் இருக்கும்போது, இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு எந்த உடல் நிலையும் தடையாக இருக்க முடியாது என்று குடியரசுத் தலைவர் கூறினார். மாற்றுத்திறனாளிகள் தங்களது திறமை மற்றும் செயல்திறன் மூலம் ஒவ்வொரு துறையிலும் புதிய உயரங்களை எட்டி வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். தீபா மாலிக், அருணிமா சின்ஹா, அவனி லெகாரா போன்ற விளையாட்டு வீரர்கள், கே.எஸ்.ராஜண்ணா போன்ற சமூக சேவகர்களின் உதாரணங்களை மேற்கோள் காட்டிய அவர், அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன், ஒருவர் அனைத்து வகையான உடல் குறைபாடுகளையும் கடந்துவிட முடியும் என்பதற்கு இவை உதாரணங்கள் என்று கூறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய நிறுவனம் கடந்த பல பத்தாண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பாடுபட்டு வருவதை குறிப்பிட்டு குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளின் சமூக-பொருளாதார அதிகாரமளித்தலுக்காக பணியாற்றும் இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய அனைவரையும் அவர் பாராட்டினார்.