Sat. Apr 5th, 2025

நடுத்தர மக்களுக்கு “மோடியின் உத்தரவாதம்” என நேற்று வெளியிடப்பட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய 10 அம்சங்களை பார்க்கலாம்.

மக்களவை தேர்தலில் 400க்கும் அதிகமான தொகுதிகளை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் தேசிய ஜனநாயக கூட்டணி அதன் இலக்கை எட்டுமா என்பது ஜூன் 4-ம் தேதியில் தான் தெரியும். நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக தலைவர்கள், இந்திய நடுத்தர மக்களின் வளர்ச்சிக்காக நீடித்த, அனைவரையும் உள்ளடக்கிய, வலுவான மற்றும் எதிர்காலத்துக்குத் தேவையான திட்டங்களை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தேர்தல் அறிக்கையின்  10 அம்சங்கள்:

1.அங்கீகாரம்:

இந்த அறிக்கை நடுத்தர மக்களின் தேவைகளை அங்கீகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை இந்த தேர்தல் அறிக்கை தெளிவாக காட்டுகிறது என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

2.மேம்படுத்தப்பட்ட இந்திய நகரங்கள்:

சீர்திருத்தங்கள் மூலம் இந்தியா முழுவதும் மெட்ரோ நகரங்களுக்கு அருகில் புதிய நவீன நகரங்களை உருவாக்குவோம் என பாஜக உறுதியளித்துள்ளது. பலதரப்பட்ட போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைத்து, நகரங்களில் பயண நேரத்தைக் குறைக்கும் ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அமைப்புகளை உருவாக்குவதற்கான வாக்குறுதியையும் பாஜக அளித்துள்ளது.

பாதுகாப்பான நகரங்களை உருவாக்குதல், கழிவு நீர் சுத்திகரிப்புக்கான சிறந்த நடைமுறைகளை மேம்படுத்துதல் குறித்த வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளது.

3.எளிமையான வாழ்க்கை முறை:

சிறந்த நகரங்கள், உயர்தர உள்கட்டமைப்பு, வேகமான மற்றும் சிறந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பு, மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல், எதிர்கால தொழில்நுட்பங்களில் முதலீடு ஆகியவற்றிற்கும் பாஜக உறுதியளித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் நடுத்தர மக்களே அதிகம் பயனடைவர் எனவும் உறுதியளித்துள்ளது.

4.உயர்நிலை வேலைகளில் கவனம்:

முக்கிய நகரங்களில் மட்டுமின்றி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் உயர்நிலை வேலைகள் வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. உள்ளூர் தொழில்முனைவோரை மேம்படுத்த சுற்றுலா போன்ற அளவீடுகளைப் பயன்படுத்துவதற்கான வாக்குறுதியையும் அளித்துள்ளது.

இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்கள் (GCC), உலகளாவிய தொழில்நுட்ப மையங்கள் (GTC) மற்றும் உலகளாவிய பொறியியல் மையங்கள் (GEC) ஆகியவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் பாஜகவில் தேர்தல் அறிக்கையான ‘சங்கல்ப் பத்ரா’ உறுதியளிக்கிறது.
மேலும், நாட்டை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றவும், வேலைவாய்ப்பை மேம்படுத்தவும் தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் உறுதியளித்துள்ளது.

5.குறைந்த செலவில் கட்டுமானம்:

அனைவரும் குறைந்த விலையில் அவர்களுக்கென சொந்த வீட்டை கட்டும் வகையில் கட்டுமான பொருட்கள், பத்திரப்படுத்துவதற்கான கட்டணம் குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்டுள்ளது.

6.70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு:

70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மிகவும் செலவுடையதாக உள்ளது. அவர்களுக்கு இன்சூரன்ஸ் பெறுவது எளிதானதாகவும் இருப்பதில்லை.

அவ்வாறு 70 வயதுக்கு மேற்பட்டவர்களின் குடும்பத்தின் வருமானம் அல்லது சொத்து நிலையைப் பொருட்படுத்தாமல் ரூ. 5 லட்சம் வரையிலான உடல்நலக் காப்பீட்டிற்கு பாஜக அரசு உறுதியளித்துள்ளது.

7.பூஜ்ஜிய மின்கட்டணம்:

இதனை செயல்படுத்துவதற்கான பிரதமரின் சூர்ய ஹர் முஃப்த் பிஜிலி திட்டமானது அயோத்தி கோவிலில் உள்ள ராம் லல்லா சிலையின் ‘பிரான் பிரதிஷ்டை’ நாளில் அறிவிக்கப்பட்டது. வீட்டுவசதி அமைப்புகள் உட்பட சூரிய தகடு கூரைகளை அமைப்பவர்கள் தங்கள் பயன்பாட்டிற்கு ‘கிரிட் கனெக்ட்’ மற்றும் ‘பேட்டரி ஸ்டோரேஜ்’ சோலார் மின்சாரத்தைப் பயன்படுத்தலாம்.

“இது சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை உருவாக்குவதோடு மின்சக்தி பயன்பாட்டுக்கான செலவை முற்றிலும் குறைக்கிறது. இதன் மூலம் நடுத்தர மக்களின் எதிர்கால மின்கட்டணத்தை பூஜ்ஜியமாக மாற்ற முடியும் என பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

8.சிறந்த கல்வி:

ஐஐடிகள், ஐஐஎம்கள் மற்றும் எய்ம்ஸ்களில் மாணவர்களுக்கு அதிக இடங்களை உருவாக்குவோம் என பாஜக உறுதி அளித்துள்ளது. இதன் மூலம் நடுத்தரக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு சிறந்த மற்றும் சர்வதேச தரத்துடன் கூடிய உயர் கல்வியைப் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகும்.

9.வேளாண்ம உள்கட்டமைப்பில் முதலீடு:

இந்தியா இதுவரை ஒவ்வொரு ஆண்டும் விளையும் அனைத்து விவசாய விளைபொருட்களில் 47 சதவீதத்தை மட்டுமே சேமித்து வைக்க முடிந்தது. பல நாடுகள் தங்கள் ஆண்டுத் தேவையில் 100 முதல் 300 சதவீதத்தை சேமித்து வைக்கின்றன.

அதே முறையை இந்தியாவில் செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவிலும் விவசாய பொருட்களை அதிக அளவில் சேமிக்க முடியும் என பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறுவதுடன் நடுத்தர மக்கள் குறைந்த விலையில் பொருட்களை பெற முடியும்.

10.உலகில் இந்தியாவின் இடம்:

இறுதியாக, இந்தியாவின் வெளியுறவு கொள்கைகள், ஒப்பந்தங்கள், இந்தியர்கள் பெருமைப்படும் வகையில் உலக அளவில் இந்தியாவின் தரத்தை உயர்த்துதல் போன்றவற்றை குறித்த கொள்கைகளும் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இதன் மூலம் இந்திய மக்களுக்கு சர்வதேச அளவில் சிறந்த அடையாளத்தயும் அங்கீகாரத்தையும் உருவாக்க முடியும்.


“மோடியின் உத்தரவாதம்” பாஜக தேர்தல் வாக்குறுதிகளின் 10 அம்சங்கள் !
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta