பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், 2023-24 நிதியாண்டில் உற்பத்தி, விற்பனை, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் புதிய சாதனை படைத்துள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான தற்காலிக புள்ளிவிவரங்களை இன்று வெளியிட்ட காதி கிராமத் தொழில் தலைவர் திரு மனோஜ் குமார், முந்தைய அனைத்து புள்ளிவிவரங்களையும் மிஞ்சும் வகையில், 2013-14 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது விற்பனையில் 399.69 சதவீதம், (தோராயமாக 400%), உற்பத்தியில் 314.79 சதவீதம் (தோராயமாக 315%), மற்றும் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் 80.96 சதவீதம் (தோராயமாக 81%) அதிகரித்துள்ளது என்றார். காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் இந்த குறிப்பிடத்தக்க செயல்திறன், 2047-க்குள் ‘வளர்ந்த இந்தியா’ என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கும், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது என்று திரு குமார் கூறினார். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக, 2023-24 நிதியாண்டில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தயாரிப்புகளின் விற்பனை ரூ.1.55 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2022-23 நிதியாண்டில் விற்பனை எண்ணிக்கை ரூ.1.34 லட்சம் கோடியாக இருந்தது. மோடி அரசின் கடைசி 10 நிதியாண்டுகளில், கிராமப்புறங்களில் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு காதி மற்றும் கிராமத் தொழில் பொருட்களின் விற்பனை, 2013-14 நிதியாண்டில் ரூ.31154.20 கோடியாக இருந்தது, இது 2023-24 நிதியாண்டில் மிக உயர்ந்த மட்டமான ரூ.155673.12 கோடியாக உயர்ந்துள்ளது, இது இதுவரை இல்லாத மிகப்பெரிய சாதனையாகும். 2023-24 நிதியாண்டில், ஆணையத்தின் முயற்சிகள் கிராமப்புறங்களில் 10.17 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கி, கிராமப்புற இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளன. இந்த வரலாற்று சாதனைக்கு வணக்கத்திற்குரிய அண்ணலின் உத்வேகம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் உத்தரவாதம் மற்றும் நாட்டின் தொலைதூர கிராமங்களில் பணிபுரியும் கோடிக்கணக்கான கைவினைஞர்களின் அயராத முயற்சிகள் ஆகியவை காரணம் என்று அவர் கூறியுள்ளார். 2013-14 நிதியாண்டில் ரூ.26,109.08 கோடியாக இருந்த காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகளின் உற்பத்தி, 2023-24 நிதியாண்டில் ரூ.108,297.68 கோடியை எட்டியது, இது 314.79 சதவீதம் அதிகரித்து, 2022-23 நிதியாண்டில் உற்பத்தி ரூ.95956.67 கோடியாக இருந்தது. தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தியே கதர் கிராமத் தொழில் ஆணையம் கிராமப்புறங்களில் வரலாற்றுப் பணிகளைச் செய்துள்ளது என்பதற்கு வலுவான சான்றாகும். கடந்த 10 நிதியாண்டுகளில் கதர் மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் புதிய விற்பனையில் சாதனை படைத்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் கதர் துணிகளின் உற்பத்தியும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 2013-14 நிதியாண்டில் காதி துணிகளின் உற்பத்தி ரூ.811.08 கோடியாக இருந்த நிலையில், 2023-24 நிதியாண்டில் 295.28 சதவீதம் உயர்ந்து ரூ.3,206 கோடியை எட்டியது. கடந்த 10 நிதியாண்டுகளில் கதர் துணிகளுக்கான தேவையும் வேகமாக அதிகரித்துள்ளது. கதர் கிராமத் தொழில் ஆணையத்தின் முக்கிய நோக்கம் கிராமப்புறங்களில் அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகும். கடந்த பத்து ஆண்டுகளில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இதில் சாதனை படைத்துள்ளது.…